search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகமதாபாத் மாநகராட்சி"

    ஆடு, மாடுகளை ஆதார் எண்ணுடன் இணைத்து வதோதரா நகரம் சாதனை படைத்துள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி குப்பைகளை அள்ள கட்டணம் நிர்ணயித்துள்ளது. #GarbageCollection #AMC
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் குப்பைகளை அள்ளும் துப்புரவு பணிகளுக்கு 105 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறதாம்.

    கடந்த 2009-ம் ஆண்டு முதல் வீடுதேடி சென்று குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் இந்த சேவைக்காக கட்டணம் எதுவும் வசூலிக்காத மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி சட்டங்களின்படி வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து குப்பை அள்ள இனி கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

    இந்த புதிய திட்டத்தின்படி, 30 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவில் உள்ள வீடுகளில் வாழ்பவர்கள் அன்றாடம் 50 பைசா குப்பை அள்ளும் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கும் பெரிய வீடுகளில் உள்ள குடும்பங்கள் தினந்தோறும் ஒரு ரூபாய் செலுத்த வேண்டும். ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது குப்பைகளை அகற்ற 2 ரூபாய் செலுத்த வேண்டும்.

    அகமதாபாத் நகரம் விரிவடைந்து கொண்டே வருவதால் குப்பைகளை அப்புறப்படுத்த புதிய வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இப்படி வசூலிக்கும் கட்டணத்தால் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கும் என அகமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அமுல் பட் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி இதே குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக முன்னர் பதவி வகித்தபோது, பல்வேறு புதிய திட்டங்களை ‘குஜராத் மாடல்’ என்று பெருமிதமாக குறிப்பிட்டு வந்தார்.



    நாட்டை தூய்மைப்படுத்தும் சுவாச் பாரத் திட்டத்தை முன்னெடுத்து செல்ல அவரது தலைமையிலான மத்திய அரசின் விளம்பர செலவினங்கள் மட்டும் பலநூறு கோடி ரூபாயாக இருக்கும்போது, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் வீட்டு குப்பைகளை அகற்ற கட்டணம் விதிக்கும் அகமதாபாத் மாநகராட்சியின் அறிவிப்பு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

    இதே மாநிலத்தின் வதோதரா நகராட்சி சார்பில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு நடவடிக்கையின்படி, தெருக்களில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் காதுகளில் பிளாஸ்டிக் பட்டை கட்டி, அதில் அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #GarbageCollection #AMC
    ×