search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WOMEN PANCHAYAT LEADERS"

    • திருச்சி மாவட்டத்தில் உள்ள பெண் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பிரதீப்குமார் அறிவுரை வழங்கினார்
    • ஆண்களுக்கு எந்தவிதத்திலும் தங்களது செயல்பாட்டில் குறைந்தவர் அல்ல என்பதை தங்களது செயல்பாட்டின் மூலம் நிரூபித்திட வேண்டும் என்றார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் சுதந்திர தின விழாவன்று தேசியக்கொடியை ஏற்றுதல் குறித்தும், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் இடர்பாடுகளை களைதல் குறித்தும் பெண் ஊராட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

    வருகிற சுதந்திர தினத்தன்று பெண் ஊராட்சி தலைவர்கள் தங்களது ஊராட்சியில் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்திட வேண்டும். பெண் ஊராட்சி தலைவர்கள் தங்களது நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

    தங்களுக்கான உரிமைகளை எப்பொழுதும் விட்டுக்கொடுத்தல் கூடாது. ஊராட்சி நிர்வாகங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

    பெண் என்பதாலோ, சாதி, மத, இனம் ரீதியாகவோ எவர் ஒருவர் இடர்பாடுகளை ஏற்படுத்தினாலும் அதனை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். பெண் ஊராட்சி தலைவர்களை செயல்படவிடாமல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் தலைவர்கள் தங்களது திறமை, ஈடுபாடு மற்றும் சிறந்த செயல்பாடுகளால் சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும்.

    ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் தங்களது செயல்பாட்டில் குறைந்தவர் அல்ல என்பதை தங்களது செயல்பாட்டின் மூலம் நிரூபித்திட வேண்டும் என்றார்.

    முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள வீடுகளில் வருகிற 15-ந்தேதி வரை வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றிடும் வகையில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களிடத்தில் தேசியக்கொடியை கலெக்டர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் பெண் ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    ×