search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore Solar Power Plant"

    சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் சார்பில் மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடன் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் 1 கிலோ வாட் திறன் கொண்ட சாதனம் நிறுவ, தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.60 ஆயிரம் முதல் ரூ.69 ஆயிரத்து 877 வரையிலான தொகையில் 30 சதவீத மானியம் தமிழக அரசின் வாயிலாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அமைக்கப்படும் சாதனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சொந்த பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ள மின்சாரமானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின்சக்தி திட்டத்துக்கு உரிய கணக்கீட்டுடன் எடுத்துக் கொள்ளப்படும்.

    பயனீட்டாளரின் மின்சார உற்பத்தி சொந்த தேவையைவிட குறைவாக உள்ள நிலையில் மின்சாரமானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் பயனீட்டாளருக்கு அளிக்கப்படும்.

    இவை அனைத்தும் நிகர அளவி மூலம் அளவிடப்படுவதால், சரியான கணக்கீட்டின்படி பயனீட்டாளருக்கு மின்சாரத்தில் ஈடுசெய்து கொள்ளப்படும். அல்லது கூடுதலாக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்குரிய கட்டணம் செலுத்த கணக்கீடு செய்யப்படும்.

    இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற அனைத்துத் தனியார் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கி வரும் அனைத்துத் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொதுக்கட்டிடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை தகுதியானவையாகும்.

    இந்தத் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் 21-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்கள் www.tedaprojects.in/teda/schemes/applicationform.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். vel@teda.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×