search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourits"

    ஒகேனக்கல் மெயின் அருவியில் நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்து காணப்பட்டதால் தொடர்ந்து 98 நாட்களுக்கு பிறகு இன்று குளிக்க தடை விலக்கப்பட்டது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் போன்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    வெள்ளப்பெருக்கின்போது மெயின் அருவியில் உள்ள தடுப்பு கம்பிகள் சிதலமடைந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தபோதும் மெயினருவியில் தடுப்பு சரிசெய்யாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டது. தடுப்பு கம்பிகளை சீரமைத்து மெயின் அருவியில் விரைவில் குளிக்க தடை விலக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மெயின் அருவியில் எண்ணெய் மசாஜ் தொழிலாளர்களை கொண்டு மணல் மூட்டைகளை அடுக்கி அருவிக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணியினை செய்துமுடித்தனர். மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க ஆவலாக காத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயினருவியில் சீரமைப்பு பணி முடிந்தும் குளிக்க தடை நீடிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் தவித்தனர். இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்து காணப்பட்டதால் தொடர்ந்து 98 நாட்களுக்கு பிறகு இன்று குளிக்க தடையை மாவட்ட நிர்வாகம் சார்பில் விலக்கப்பட்டது. மேலும், தடுப்பு கம்பிகளை சீரமைக்கப்பட்டு இன்று மெயின் அருவியை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு விடுமுறையொட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மெயினருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், துணை தாசில்தார் சிவக்குமார், பென்னாகரம் ஆர்.ஐ. சிவன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×