search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Kapileshwar Temple"

    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் ஒரு மாதம் ஹோமம் மகோற்சவம் நடக்கிறது. இந்த ஹோம மகோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை, ஏகாந்தமாக நடக்கிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஹோம மகோற்சவம் ஒரு மாதம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஹோம மகோற்சவம் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்தப் ஹோம மகோற்சவத்தில் பங்கேற்று வழிபட்டால் புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனினும், கொரோனா தொற்று பரவலால் இந்த ஹோம மகோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை, ஏகாந்தமாக நடக்கிறது.

    அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், விபூதி, இளநீர், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை கணபதி பூஜை, புண்யாவதனம், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம், சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம், 11-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 12-ந்தேதி நவக்கிரக ஹோமம், 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்), 22-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்), சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி கால பைரவர் ஹோமம், 4-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் ஆராதனை நடக்கிறது.

    மேற்கண்ட ஹோம மகோற்சவத்தில் கோவில் உதவி அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர், கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்கிறார்கள்.
    ×