search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் பேச்சு"

    • கோவையில் ரூ.13.82 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • தமிழக முதல்-அமைச்சர் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார்

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரி களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ரூ.13 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரத்து 250 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் நகராட்சி துறை அமைச்சர் நேரு, கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். அதனால் தான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொழிலாளர்கள் சாலைக்கு வந்து எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    இந்த கூட்டத்தில் நகர்ப்புற அமைச்சர் நேரு கலந்துகொண்டது மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்களுக்கு நீண்ட நாட்களாக விடுபட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருமண உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்து இழப்பு நிவாரண நிதி ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உடனடியாக 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன் பின்னர் 57 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அடுத்த கட்டமாக நிதி உதவி பெற்று அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தீர்வு காணப்படாத பிரச்சனைகளுக்கு 25 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விடுபட்ட தொகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இது போன்ற ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காவிட்டால் உடனடியாக அணுகலாம். தொழிலாளர் துறை அதிகாரிகளும் பல உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் தற்போது ரூ.13 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரத்து 750 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கான ஆட்சி, தொழிலாளர்களும் இந்த நன்றியை மறக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பி.ஆர். நடராஜன் எம்.பி., கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×