search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St Francis Xavier"

    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால்தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.

    புனித சவேரியார்

    கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.

    ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.

    புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.

    மன்னருக்கு உதவி

    அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.

    அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.

    அழியாத உடல்

    அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    பேராலயம்

    புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.

    கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

    திருவிழாவில் மக்களுக்கு சிறப்பு

    சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

    கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    தூய ஆரோபண மாதா ஆலயம்

    கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அந்த ஆலயத்தில் அவர் தனது புனிதம் மிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

    கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் ஒரு பகுதியில் தூய ஆரோபண மாதா ஆலயம் இன்றும் இருக்கிறது. மக்கள் அந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் முன் அமர்ந்து வேண்டுதல் செய்தும், வணக்கம் செலுத்தியும் வருகிறார்கள். புனித சவேரியார் இந்தியாவுக்கு வந்ததின் 450-வது ஆண்டு நினைவாக அவர் கட்டியெழுப்பிய தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை 1-5-1994 அன்று தொடங்கப்பட்டது.

    புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற பேராலயம்

    கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.

    எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள். விழாவில் கடைசி 3 நாட்கள் தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.

    அதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர் பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர். இந்த நிலையில் 10-ம் திருவிழா நேற்று பகலில் தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் வைக்கப்பட்டு இருந்த 4 தேர்கள் வீதிகளில் வலம் வந்தது.

    பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோட்டுக்கு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது. அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.

    முன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது.

    10-ம் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர். தேர் பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்று வருகின்றன.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் தேர் பவனி நடந்தது. தேரின் பின்னால் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.

    இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேரில் நல்லமிளகு, உப்பு மற்றும் மலர் மாலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.


    சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    இறுதி நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறும் புனித சவேரியார் பெருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி கேப் ரோட்டில், செம்மாங்குடி ரோடு சந்திப்பில் இருந்து ரெயில்வே ரோடு சந்திப்பு வரை தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதே போல இந்த ஆண்டும் கேப் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். இதனால் சவேரியார் பேராலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்ததால் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. 
    ×