search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Komban Elephant"

    • பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி விட்டனர்.

    அங்கிருந்து படிப்படியாக முன்னேறிய அரிசி கொம்பன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்தது. ஏகலூத்து ரோடு ஆசாரி மார் வீதிகளில் வலம் வந்த அரிசி கொம்பன் சுருளிப்பட்டி மின் நிலையம் அருகே உள்ள புளியந்தோப்பில் தஞ்சமடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நந்தகோபாலசாமி நகரை ஒட்டியுள்ள வாழைத்தோப்புக்குள் புகுந்தது.

    அங்கு அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் திடீரென அங்கிருந்து கிளம்பிய யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டி மற்றும் கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்குள் புகுந்தது.

    இன்று காலை வரை அதே இடத்தில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டுள்ளது. யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னலை வைத்து வனத்துறையினர் அதன் இருப்பிடத்தை அறிந்து வந்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் சிக்னல் கிடைக்காததால் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இவை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கும்கிகள் முன்பு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அதன் முன்பு செல்பி எடுக்க தொடங்கியதால் அதன் இருப்பிடத்தை மாற்றினர்.

    தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதியில் 3 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டாக்டர் பிரகாஷ் தலைமையில் டாக்டர்கள் செல்வம், சந்திரசேகரன், கலைவாணன் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளனர்.

    மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் யானை தற்போது யானை கஜம் பகுதியில் உள்ளது. மயக்க ஊசி செலுத்திய உடன் யானைக்கு கிறுகிறுப்பு ஏற்பட்டு சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து அதன் பிறகுதான் கீழே விழும். எனவே சமதளத்தில் யானை இருந்தால் தான் மயக்க ஊசி செலுத்த முடியும். மலைப்பாங்கான பகுதியில் மயக்க ஊசி செலுத்தும்போது திடீரென பள்ளத்தில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.

    அதற்காகத்தான் மயக்க ஊசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு டோசும் 5 முதல் 7 மில்லி அளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.

    மயக்க ஊசியின் அளவு குறித்து ஏற்கனவே இதனை பிடித்த கேரள வனத்துறையினரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளது என்றனர்.

    கம்பம், சுருளிப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரமும் அரிசி கொம்பன் யானை மீண்டும் வந்து விடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் இன்று 3-வது நாளாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் திராட்சை தோட்டங்கள், ஏலத் தோட்டங்கள், தினசரி கூலி வேலைகளுக்கு செல்லும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே யானை நடமாட்டம் உள்ள பகுதியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் தெரிவிக்கையில், 35 வயது மதிக்கத்தக்க அரிசி கொம்பன் ஆண் யானை 12 அடி உயரம் கொண்டது. இதன் பிரம்மாண்ட தோற்றம் மற்றும் சத்தம் காரணமாக அருகில் பொதுமக்கள் செல்ல இயலாது. தற்போது அதனை பிடிக்க சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடித்த உடன் பரம்பிக்குளம் பகுதியில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக யானை நகருக்குள் சுற்றி வந்ததால் 3 கிலோ எடை குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சவாலான பணி என்ற போதிலும் இதனை சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    அரிசி கொம்பன் யானை கம்பம் நகருக்குள் வந்த முதல் நாளே அதனை ட்ரோன் மூலம் படம் பிடிக்க யூடியூப்பர் முயன்றதால் அதன் திசை மாறியது. மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் யானை முகாமிட்டு இருந்தபோது சின்னமனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (23) என்பவர் ட்ரோன் மூலம் படம் பிடித்தார். இதனால் மிரண்டு போன அரிசி கொம்பன் வெவ்வேறு இடங்களுக்கு ஓடத்தொடங்கியது. இதனையடுத்து ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரிசி கொம்பன் யானை இருப்பிடம் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெவ்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    ×