search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puneeth Rajkumar"

    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார். 

    இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

    புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்
    புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்

    மேலும் இந்நிகழ்ச்சியில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விஷால் நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    புனித் ராஜ்குமாரின் இறப்பு, குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் சகோதரரான நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு, எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி தங்களின் குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

    அவர் என்னை விட 13 ஆண்டுகள் சிறியவர். அவர் இறப்பு எனது குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தீவிர வேதனை அடைகிறார்கள். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியுள்ளது.

    சிவராஜ்குமார்
    சிவராஜ்குமார்

    கர்நாடக அரசு குறிப்பாக போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனது தந்தை இறந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கவில்லை. இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் குடும்பத்தின் மீது அவர் மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். யாரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. புனித் ராஜ்குமாரே இதை விரும்ப மாட்டார். அன்பு இருக்க வேண்டும். அதற்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்வது முக்கியம்”. 

    இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.
    அனைவரின் ஒத்துழைப்பால் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் அமைதியாக நடந்து முடிந்தது. இத்தகைய துக்கமான நேரத்தில் ரசிகர்கள், பொதுமக்கள் அமைதி மற்றும் பொறுமை கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தினர். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், பாதுகாப்பு பணியை சவாலாக ஏற்று போலீஸ், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ரசிகர்கள் 2 பகல், 2 இரவு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து 1,500 போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும், மத்திய போலீஸ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் தூக்கத்தை மறந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூருவில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. என்னை பலர் தொலைபேசியில் அழைத்து, நன்றி தெரிவித்தனர். ரசிகர்களும் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். புனித் ராஜ்குமார் குடும்பத்தினரும் அரசுக்கு ஒத்துழைத்தனர். அனைவரின் ஒத்துழைப்பால் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

    இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
    ×