search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Narendra Modi rally"

    திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் பெண் மந்திரியின் இடுப்பில் சக மந்திரி கை வைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #ManojKantiDeb
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார்தேவ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அகர்தலா நகரில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் கடந்த 9-ந் தேதி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

    அப்போது, மேடையில் வைத்து மாநில விளையாட்டு மற்றும் உணவுப்பொருள் வினியோகத்துறை மந்திரியான மனோஜ் காந்தி தேவ், சக பெண் மந்திரியான சாந்தனா சாக்மாவின் இடுப்பில் கை போட்டார்.

    இது தொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரச்சினை எழுப்பி உள்ளது.

    அநாகரிகமான முறையில் பெண் மந்திரியின் இடுப்பில் கைபோட்ட மந்திரி மனோஜ் காந்தி தேவ்வை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரியை வலியுறுத்தி வருகிறது.

    அத்துடன் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

    இந்த நிலையில் பெண் மந்திரி சாந்தனா சாக்மா நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அன்று விழா மேடையில் மந்திரி மனோஜ் காந்தி தேவ்வுடன் இழிவான எந்த செயலும் நடைபெற்று விட வில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ, மந்திரி மனோஜ் காந்தி தேவை நீக்குவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அவர்களைப் போன்று மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுக்கு தெரியாது. சித்தரிக்கப்பட்ட வீடியோ அது.

    மாநில மந்திரிசபையில் நான் மட்டும்தான் பெண் மந்திரி. இதில் நான் எந்த அசவுகரியத்தையும் உணரவில்லை. எனக்கு சக மந்திரிகளுடன் சகோதர உறவுதான் உள்ளது. அத்தகைய உறவில் ஒரு சக மந்திரியின் ஒழுக்க நெறியை கேள்வி எழுப்பி உள்ளனர். இது அவர்களது இழிவான மனப்பாங்கை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×