search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamban Road bridge"

    பாம்பன் ரோடு பாலத்தின் உறுதித்தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சுரங்கப்பாதை மூடியை திறக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
    ராமேசுவரம்:

    மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளை கடந்து ரோடு பாலத்தில் போக்குவரத்து மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    இதனிடையே பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியில் சாலை பகுதியின் மேல் பகுதியில் உள்ள இரும்பு தகடு இணைப்புகள் அமைந்துள்ள சாலை சேதமடைந்து பெயர்ந்துள்ளதால் இரும்புத் தகடுகளும் வெளியே வரும் நிலையில் ஆபத்தான நிலையில் காட்சி அளித்து வருகின்றன.

    இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியில் சேதமான பகுதி மற்றும் ரோடு பாலத்தின் உறுதித்தன்மையை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் சென்னையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 2 பேர் கொண்ட குழு நேற்று ரோடு பாலத்துக்கு வந்தனர். அவர்கள் பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியில் சேதமடைந்த இரும்பு தகடு மற்றும் சாலையை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து மையப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதைக்கு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.அப்போது பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சுரங்கப் பாதைக்கு செல்லும் மூடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் திறக்க முடியவில்லை. இதனால் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரிகள் குழுவினர் பாலத்தின் உள் பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய முடியாமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    தொடர்ந்து மீன்பிடி படகு மூலமாக சென்று பாம்பன் ரோடு பாலத்தின் கடலுக்குள் உள்ள தூண்களில் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் சதீஷ்குமார், உதவி பொறியாளர் மகேஸ்வரி, ஜூனியர் பொறியாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    ×