search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oil Massage Workers"

    ஒகேனக்கல் மெயினருவியில் குளிக்க தடைவிதித்து இருப்பதால் எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் தடுப்பு கம்பிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் மழை குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அணைகளில் இருந்து உபரி நீர் குறைவாக திறந்து விடப்பட்டது.

    கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது. நீர்வரத்து படிப்படியாக குறைந்து கடந்த 2 தினங்களாக 13 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்து கொண்டிருந்தது.

    நேற்று முன்தினம் 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து 43 ஆயிரத்து 854 கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அந்த நீர் நாளை காலை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என்பதால், நீர்வரத்து குறித்து தொடர்ந்து பிலி குண்டுலுவில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். அதிக நீர்வரத்தின்போது ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயினருவியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்தது. இதனால் குளிக்க தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டது. இன்றும் மெயினருவில் குளிக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் குறைவாக வருவதால் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளித்தனர்.

    மெயினருவியில் குளிக்க தடைவிதித்து இருப்பதால் எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் சரிவர வேலை இல்லாமல் திண்டாடினர். அவர்கள் இன்று மெயினருவியை சுத்தம் செய்து வருகின்றனர். தடுப்பு கம்பிகளை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உள்ளதால் மாமரத்து கடுவு பகுதியில் பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு உள்ளது. மாற்று வழிப்பாதையான கோத்திக்கல் பாறை வழியாக மட்டும் பரிசல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். #Hogenakkal #Cauvery
    ×