search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagarcoil anna bus stand"

    நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் அருகே அவதூறாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன், நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு மற்றும் நிர்வாகிகள் பசலியான், ஷேக்தாவூது, உதயகுமார் உள்பட பலர் திரண்டு வந்தனர். அவர்களுடன் வந்த தொண்டர்கள் சிலர் போராட்டம் நடைபெறும் பகுதியில் திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி கூறினர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதுகாப்பு பணிக்கு வந்தார். அவர் தி.மு.க.வினரை நோக்கி சில வார்த்தைகளை பேசினார். அவரது பேச்சுக்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.

    தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசியதாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் தொண்டர்கள் புகார் கூறினர். சப்-இன்ஸ்பெக்டர் தன் பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய சுரேஷ்ராஜன், அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றபடி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள செம்மாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

    சுரேஷ்ராஜனுடன் ஏராளமான தி.மு.க.வினரும் சாலையில் அமர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    உடனே டி.எஸ்.பி. இளங்கோவன் மறியலில் ஈடுபட்ட சுரேஷ்ராஜனை சமரசம் செய்ய முயன்றார். அதற்கு அவர் சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் அவர் நடுரோட்டில் படுத்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பினார். தி.மு.க.வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அண்ணா பஸ் நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. இளங்கோவனிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் சுரேஷ் ராஜனை சந்தித்து இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    எஸ்.பி. ஸ்ரீநாத்தின் உறுதி மொழியை ஏற்று சுரேஷ் ராஜனும், தி.மு.க.வினரும் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு சுரேஷ் ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வினரை போலீசார் வேண்டும் என்றே அவதூறாக பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே போராடுகிறார்கள். போராடும் அவர்களை போலீசார் இழிவாக பேசுகிறார்கள். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

    இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக கொண்டுச் சென்று போராட்டம் நடத்துவோம். இன்று மாவட்ட எஸ்.பி. எங்களிடம் அளித்த உறுதி மொழிப்படி சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாளை முதல் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்.

    என்ன போராட்டம் நடத்துவது என்பது பற்றி அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×