search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mango exports"

    மாம்பழ உற்பத்தி சிறப்பான வகையில் அமைந்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகத்தில் மாம்பழ உற்பத்தியில் தென்மாவட்டத்தில் முதன்மை வகித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25000 ஏக்கர் அளவில் மாம்பழம் பயிரிடப்பட்டு வருகின்றது.

    உயர்ரக மாம்பழ வகைகளான அல்போன்சா, காதர், இமாம்பசந்த், மல்கோவா, காசா, கல்லா மாங்காய் போன்ற ரகங்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கும் அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தாண்டு மாம்பழ உற்பத்தி சிறப்பான வகையில் அமைந்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் விளைச்சலும் விற்பனை விலையும் திருப்திகரமாக அமைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இமாம்பசந்த், காதர் போன்ற உயர் ரக மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    போடி சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், குரங்கணி, கொட்டகுடி பகுதிகளில் விளையும் மாம்பழம் இயற்கை மழை சார்ந்து விளைவதால் இப்பகுதி மாம்பழத்திற்கு தனி மதிப்பு உண்டு. எனவே தற்போது மாம்பழ ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது.

    தினசரி 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாம்பழங்கள் ரக வாரியாக பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழக அரசு மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளதால் விரைவில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×