search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurangani Muthumaalai Amman Temple"

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கொடை விழாவை முன்னிட்டு ஜூலை 9-ந் தேதி நாதஸ்வர கச்சேரி, பஜனை குழுவினர் பக்தி பாடல் நிகழ்ச்சியும், நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோவிலின் கொடை விழா வருகிற ஜூலை மாதம் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    கால்நாட்டு விழா

    அதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நித்திய கால பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு கால்நாட்டு விழாவை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கும் புஷ்ப அலங்காரம், தீபாராதனை, அதைத்தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேற்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடைவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முதல் விரதத்தை தொடங்கினார்கள்.

    நிகழ்ச்சி நிரல்

    கொடை விழாவை முன்னிட்டு ஜூலை 9-ந் தேதி நாதஸ்வர கச்சேரி, பஜனை குழுவினர் பக்தி பாடல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10-ந் தேதி மாலை 4 மணிக்கு தேவஸ்தான வித்வான் மங்கள இசை, அதை தொடர்ந்து கம்ப ராமாயணத்தில் தமிழ் பண்பாடு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மாபெரும் பட்டி மன்றமும், இரவு 7 மணிக்கு ஸ்டார் நைட் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை நாதஸ்வர கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவு, மாலை 4 மணிக்கு மாபெரும் பட்டி மன்றம், மாலை 6.30 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைபெறுகிறது.

    நண்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 1 மணிக்கு ஆனி பெருந்திருவிழாவும் (கொடைவிழா) நடைபெறும். இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 1 மணிக்கு நாராயண சுவாமி சின்ன சப்பரத்திலும், இரவு 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 18-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    கால்நாட்டு விழாவில் செல்வராஜ், ஜெகதீசன், முத்துமாலை, ராஜேந்திரன், சப்தசாகரன், ஜெயசங்கர், சந்திரசேகரன், குணசேகரன், ஈஸ்வரன், ரவி, பெரியசாமி, ராகவன், கேசவமூர்த்தி, சிவசுப்பிரமணியன், ஶ்ரீதர், அர்ஜூன் பாலாஜி, தங்கராஜ், முத்துக்குமார், முத்து லிங்கம், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ், ஊராட்சி தலைவர் ஜெய முருகன், முத்து கிருஷ்ணன் மற்றும் 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தக்கார் ராமசுப்பிரமணியன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.

    ×