search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Dam"

    கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. #Cauvery #krsdam #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பியது.

    இதையடுத்து கபினி, மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 2.05 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு 3-வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 25 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால் கரையோரம் இருந்த கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் கடந்த 22-ந் தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வெகுவாக குறைக்கப்பட்டது



    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வடிந்து சகஜ நிலைக்கு திரும்பியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் 42 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பரிசல் சவாரி தொடங்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 16 கண் பாலம் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் தமிழகத்தை மிரட்டும் வகையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அணைகளின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று 27 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இன்று இது 32 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 21 ஆயிரத்து 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 21 ஆயிரத்து 201 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    கபினி அணைக்கு 13 ஆயிரத்து 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 11 ஆயிரத்து 458 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் நேராக தமிழகத்தை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து இன்று காலை முதல் ஒகேனக்கல் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அணை பக்கம் யாரும் செல்லாத வகையில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 22 ஆயிரத்து 290 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது மாலை 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று காலை 20 ஆயிரத்து 242 கன அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்த 20 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    வருண பகவான் கருணை காட்டியதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஒரே மாதத்தில் 3 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதம் 23-ந் தேதி மற்றும் இம்மாதம் 11 மற்றும் 22-ந் தேதிகளில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். #Cauvery #krsdam #kabinidam
    ×