search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam man murder"

    கடையம் பெட்டிக்கடைக்காரர் கொலை வழக்கு பற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும்நிலையில் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கீழக்கடையம் ஆலிபூதத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 55). இவருக்கு திருமணம் முடிந்து, கடந்த 15 வருடங்களுக்கு முன்பே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த இவர், கடையம் ரெயில் நிலையம் செல்லும் வழிக்கு எதிரே உள்ள தனக்கு சொந்தமான கட்டிடத்தில் பெட்டிக்கடையுடன் கூடிய டீக்கடை நடத்தி வந்தார். தனது கடையின் மாடியில் உள்ள அறையில் அவர் குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை மாடியில் உள்ள அறையில் நரசிம்மன் வேட்டி சட்டையால் கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத் லிங்கம், சுரேஷ், சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். நெல்லையில் இருந்து மோப்ப நாய் ‘டைகர்’ வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஓடியது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல், கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் 5-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் நரசிம்மன் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    கொலை பற்றி துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும்படியான நபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை அப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. எனினும் கொலை பற்றி துப்பு துலங்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×