search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health department surveillance"

    • கேரளாவில் கொரோனா, சிக்குன் குனியா, பறவை காய்ச்சலை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
    • சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் அமைத்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கம்பம்:

    கேரளாவில் கொரோனா, சிக்குன் குனியா, பறவை காய்ச்சலை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. தென் மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே குரங்கு அம்மை நோய் காணப்பட்டதால் தென் மாநிலங்கள் உஷாராக இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து தமிழகத்தில் விமான நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தீவர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக -கேரளா எல்லைகளில் 16 இடங்களில் கண்காணிப்பு செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும்.தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கக்கூடிய போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய 3 வழித்தடங்கள் உள்ளது.

    இந்த 3 வழித்தடங்கள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் தமிழக கேரள எல்லை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஜீப்புகளில் கூலி வேலை ஆட்கள் கேரளாவிற்கு சென்று கூலி தொழில் செய்துவிட்டு வருகின்றனர்.

    எனவே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் கொரோனா, குரங்கு அம்மை போன்ற நோய் தாக்குதல்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பது குறித்து குமுளி அடிவாரப் பகுதியான லோயர் கேம்ப் பகுதியிலும்,கம்பம் மெட்டு அடிவாரப் பகுதியான கம்பத்திலும் சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் அமைத்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் காய்ச்சல், தலைவலி மற்றும் குரங்கு அம்மைக்கான நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனவும் அவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கம்பம் மெட்டு, குமுளி போன்ற சோதனை முகாம்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஷிப்ட் முறையில் ஒரே ஒரு சுகாதாரத் துறை சார்ந்த நபர் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது, மேலும் முகாம் அமைப்பதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் உள்ளது. இந்த சோதனை முகாம் ஒரு கண்துடைப்பாகவே நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ×