search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female suicde bomer"

    துனிசியா நாட்டின் தலைநகரில் இன்று பெண் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். #Femalesuicidebomber #Tunisiauicidebomber
    டுனிஸ்:

    துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.

    கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதத்தில் தலைநகர் டுனிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்பட 38 பேர் பலியாகினர்.

    இதனால், துனிசியா நாட்டுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு சில நாடுகள் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. இங்கு ஓரளவுக்கு நிலைமை சீரடைந்ததால் அந்த எச்சரிக்கை கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டுனிஸ் நகரின் மத்திய பகுதியில் ஹபிப் பவுர்குயிபா நிழற்சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் அருகே காவலுக்கு நின்றிருந்த போலீசாரை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உள்பட  9 பேர் படுகாயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    பிரான்ஸ் நாட்டு தூதரகம், துனிசியா அரசின் அமைச்சகங்களின் தலைமை அலுவலகம் மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்லும் ஓட்டல்களில் நிறைந்த இந்த பகுதிக்கு வந்த ஒரு பெண் பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்த இயலாத ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. #Femalesuicidebomber #Tunisiauicidebomber
    ×