search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore couple"

    கன்னியாகுமரியில் பிச்சை எடுத்து இருந்த 6 வயது அனாதை சிறுவனை கோவை மாவட்ட தம்பதி தத்தெடுத்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், கோவில் விழாக்கள் மற்றும் தெருக்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் கண்காணித்து மீட்டு வருகிறார்கள்.

    இது போல கடந்த ஆண்டு மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் பார்வை இழந்த நபருடன் சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இதனை அப்பகுதி கடைக்காரர்கள் பார்த்து போலீசாருக்கும், குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

    மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையிலான குழுவினர் விரைந்துச் சென்று அச்சிறுவனை மீட்டனர்.

    அந்த சிறுவனின் குடும்பம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா விசாரணை மேற்கொண்டார். அப்போது சிறுவனின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சிறுவனுக்கு தாயாரும், ஒரு சகோதரரும் இருந்தனர். இதில் தாயாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அதன்பிறகு சிறுவனின் சகோதரனும் மாயமாகி விட்டார். இதனால் சிறுவன் ஆதரவற்றவராக மாறினார். அப்போது பிச்சை எடுக்கும் கும்பலைச் சேர்ந்த கண்தெரியாத நபர் சிறுவனை அவருடன் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுவனை கன்னியாகுமரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும் 6 வயதான சிறுவனை பள்ளியிலும் சேர்த்தனர். தற்போது சிறுவன் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்படும் சிறுவர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்படுவார்கள். இதற்கான விபரங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படும்.

    இதில் குழந்தைகளை தத்து கேட்பவர்கள் விவரமும் பதிவாகும். அதனை அதிகாரிகள் முழுமையாக விசாரித்து குழந்தைகளை தத்து கொடுப்பார்கள். அதன்படி கன்னியாகுமரி காப்பகத்தில் தங்கி இருந்த சிறுவனின் விவரமும் தத்து பட்டியலில் இடம் பெற்றது.

    இதனை கோவையைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் பார்த்தார். அவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பேறு கிடைக்கவில்லை. இதற்காக உடல் பரிசோதனை மேற்கொண்டும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

    எனவே அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினர். இதற்காக அரசின் தத்தெடுப்பு மையத்தில் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு கன்னியாகுமரி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவனின் விவரங்கள் கொடுக்கப்பட்டது. அதனை பார்த்த கோவை தம்பதி அந்த சிறுவனை தத்தெடுக்க முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். இங்குள்ள அதிகாரிகள் தத்து கேட்ட தம்பதியினரைப் பற்றி விசாரித்து அவர்களுக்கு சிறுவனை தத்து கொடுக்க அரசு விதிப்படி ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா கன்னியாகுமரி காப்பகத்திற்குச் சென்று சிறுவனிடம் அவரை ஒரு தம்பதி தத்தெடுக்கும் விபரத்தை தெரிவித்தார்.

    தத்து கொடுக்கப்பட்டால் இனி அந்த சிறுவன் கோவை தம்பதியின் வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு புரிய வைத்தார். அதற்கு சிறுவன் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து தத்து கொடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. கன்னியாகுமரி காப்பகத்தில் இருந்து சிறுவன் நேற்று மாலை தூத்துக்குடி தத்து கொடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கோவை தம்பதியும் வந்திருந்தனர். அவர்களிடம் சட்டபூர்வ நடவடிக்கைகள் நடத்தப்பட்டது.

    அதன்பிறகு சிறுவன் கோவை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டார். மாநில தத்துவள ஆதார மையத்தின் மூலம் சட்டப்படி சிறுவன் தத்து கொடுக்கப்பட்டதாக குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா தெரிவித்தார்.
    ×