search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai student arrested"

    பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் தீர்த்துக் கட்டியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் சென்னையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி விஜயகுமார் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் பொன்பரப்பிக்கு வந்தார்.

    அங்கு மனைவியிடம் ஒரு சிறிய வேலை இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது மனைவி செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றங்கரையோரம் விஜயகுமார் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அவரது செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், ஒரு பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசி இருந்தது தெரியவந்தது. கடைசியாக கடந்த 8-ந் தேதி பகலில் அதே பெண்ணுடன் விஜயகுமார் போனில் பேசி உள்ளார். அதன்பிறகு சிறிதுநேரத்தில் அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அந்த எண் யாருடையது என விசாரித்தனர். அந்த எண்ணை திருச்சி உறையூரை சேர்ந்த ஈஸ்வரி (21) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஈஸ்வரியை பிடித்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து பகுதிநேரமாக ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி கொண்டு, சி.ஏ. படித்து வந்துள்ளார். அப்போது நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த விஜயகுமாருக்கும், ஈஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

    வடபழனியில் தங்கி இருந்த விஜயகுமார் ஒருநாள் ஈஸ்வரியை தனது அறைக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது விஜயகுமார், ஈஸ்வரியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி அவர் ஈஸ்வரியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவர், ஈஸ்வரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக ஈஸ்வரி கூறினார். இதனை ஏற்காத விஜயகுமார் தொடர்ச்சியாக அவரிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்துபோன ஈஸ்வரி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 7-ந் தேதி இரவு ஈஸ்வரியும், விஜயகுமாரும் சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றனர். பின்னர் விஜயகுமார் பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் ஈஸ்வரி வீட்டுக்கு செல்லாமல் சத்திரம் பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது, திருச்சி இ.பி. ரோட்டை சேர்ந்த மாரிமுத்து (33) சத்திரம் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடியபடி அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்தார். இதனைக்கண்ட ஈஸ்வரி மாரிமுத்துவிடம், தன்னை ஒருவன் கெடுத்து விட்டதாகவும், அவனை கொலை செய்ய வேண்டும் என்றும், தன்னை உங்களுடைய தங்கைபோல் நினைத்து கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு அழுதார்.

    கொலை செய்ய சம்மதித்த மாரிமுத்து, இதற்காக ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், ஈஸ்வரி ரூ.55 ஆயிரத்தை தருவதாக ஒப்பு கொண்டார். இதையடுத்து மாரிமுத்து தனது கூட்டாளிகளான குமார் (25), கணேசன்(23) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார். பின்னர் 4 பேரும் விஜயகுமாரை கொலை செய்ய வேண்டிய இடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து அங்கு நேரில் சென்று பார்த்தனர்.

    பின்னர் ஈஸ்வரி, விஜயகுமாருக்கு போன் செய்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வரவழைத்தார். அங்கு தயாராக இருந்த ஈஸ்வரி, விஜயகுமாரை அழைத்து கொண்டு ஆட்டோவில் திருச்சி-கல்லணைரோட்டில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு சென்றதும் காவிரி கரையோரம் விஜயகுமாரை அழைத்து சென்றார்.

    அப்போது அங்கு ஏற்கனவே கத்தியுடன் புதரில் பதுங்கி இருந்த மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் பாய்ந்து சென்று விஜயகுமாரை சரமாரியாக குத்தி படுகொலை செய்தனர். இந்த காட்சியை அருகில் நின்று ஈஸ்வரி பார்த்தார். பின்னர் விஜயகுமாரின் உடலை அங்கு வீசிவிட்டு 4 பேரும் காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் நடந்து சென்று கரையேறி சென்று விட்டனர்.

    இதையடுத்து மாணவி ஈஸ்வரி, மாரிமுத்து, கணேசன், குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ‘ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதால் பயந்துபோன நான் விஜயகுமாரை கொலை செய்தேன்’ என போலீசாரிடம் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட ஈஸ்வரி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது மாணவியாக தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×