search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caged children"

    அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல என பிரிட்டன் பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார். #cagedchildreninUS #TheresaMay #BritishPM
    லண்டன்:

    எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், பிரிட்டன் பாராளுன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் தெரசா மே, ’அமெரிக்க குடியேறிகளின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது மிகுந்த வேதனையை உண்டாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

    அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கூண்டுகள் போன்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. இது தவறு, இதை நாங்கள் ஏற்க முடியாது. பிரிட்டன் அரசின் அணுகுமுறை இதுவல்ல எனவும் தெரசா மே தெரிவித்துள்ளார்.

    அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் போது இது தொடர்பாக பேச போவதாகவும் அவர் கூறியுள்ளார். #cagedchildreninUS #TheresaMay #BritishPM
    ×