search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boycott election"

    கொடைரோடு அருகே தேர்தலை புறக்கணிக்க வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்களை போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

    கொடைரோடு:

    நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள பொம்மணம்பட்டி கிராமம் 15வது வார்டில் 616 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த கிராமத்தில் 200-க்கும்மேற்பட்ட ஒரு சமூக மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமம் அருகே 5 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து பிற்பட்டோர் நலத்துறை சார்பாக விலை கொடுத்து வாங்கியது. அந்த இடத்தில் 100-க்குமேற்பட்ட பிற்பட்டோர் மக்களுக்கு இலவச பட்டா வழங்கி உள்ளன.

    இந்த இடத்தில் பட்டா வழங்கிய மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வருவாய்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர். ஒரு சமூகம் வாழ்ந்து வரும் பகுதியில் மற்ற சமூகத்தினருக்கு இடம் தரக் கூடாது, பொம்மணம்பட்டி சமூகத்தினருக்கு சாமி கும்பிடும் இடம் இருப்பதால் பிற சமூகத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் வருவாய்துறை அதிகாரிகள் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை.

    தற்போது திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தல், நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18 தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பு செய்ய முடிவு செய்த பொம்மணம்பட்டி மக்கள் சிலர் வீதிகள், வீடுகள், மின் கம்பங்கள், தண்ணீர் தொட்டிகள் மீது கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் பொம்மணம்பட்டிக்கு சென்று கறுப்பு கொடி கட்டியவர்களையும் ஊர் முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலில் ஈடுபடக் கூடாது. உங்கள் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் அது நமது உரிமையாகும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்க முடியும் அங்கு கூடியிருந்தவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தெரிவித்தார்.

    அதன் பிறகு கறுப்பு கொடிகளை அகற்றிட வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர். அப்போதே கட்டப்பட்டு இருந்த கறுப்பு கொடிகளை அகற்றி போலீசாரிடம் கொடுத்தனர்.

    ×