search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assistant Director of Agriculture"

    வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.
    குடவாசல்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் வயல் வரப்பில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் சிலர் உளுந்து சாகுபடி செய்து உள்ளனர். இவ்வாறு உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் பார்வையிட்டார். குடவாசல் அருகே சற்குணேஸ்வரபுரத்தில் வயல்களை பார்வையிட்ட அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-

    மழை பெய்வதால் அதன் மூலம் கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி வயல் வரப்பு ஓரங்களில் உளுந்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் கூடுதல் லாபம் பெற்று விவசாயிகள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். மேலும் வயல் வரப்புகளில் களைச்செடிகள் வளராமல் தடுக்கப்படுகிறது.

    நெல் சாகுபடி காலங்களில் களைச்செடிகள் பூச்சிகளுக்கு மாற்று வாழ்விடமாக அமைகிறது. எனவே வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும்போது பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம் பெருக்கம் அடைகிறது.

    மேலும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை தவிர்க்கலாம். உளுந்து பயிர் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேகரிக்கும் தன்மையை கொண்டு இருப்பதால், மண்ணின் வளமும் கூடுகிறது. வரப்பு உளுந்து சாகுபடியின் போது வரப்புகளில் உள்ள களைச்செடிகளை அகற்றிவிட்டு ஏக்கருக்கு 2 கிலோ விதையை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

    வரப்பு உளுந்து சாகுபடிக்கு என்று தனி கவனம் செலுத்த தேவையில்லை. இதற்கு தேவையான உளுந்து விதைகள் ஏ.டி.டி. 5 மற்றும் விதை நேர்த்திக்கு தேவையான ரைசோபியம், சூடோமோனாஸ் போன்றவை குடவாசல் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 50 சதவீத மானிய விலையில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×