search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem corporation"

    வருகிற 1-ந் தேதி முதல் சேலம் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. #PlasticBan
    சேலம்:

    சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றதில் தமிழக முதலமைச்சர் கடந்த 5-ந் தேதி அன்று ஒரு முறை பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அடுத்த ஆண்டு 1.1.2019 முதல் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளி வளாகங்களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கை பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.


    மேலும் பாரம்பரியமாக பயன்படுத்தக் கூடிய வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவற்றில் மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளில் தேங்கி, கழிவு நீர் செல்லும் பாதைகளிலும் அடைப்பு ஏற்பட்டு, தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அமைந்துவிடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயு மூலமாக சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்பதால் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்கும் பொருட்டு, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #PlasticBan

    ×