search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Collector's Office"

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • 5 குழந்தைகள் உட்பட 20 பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களது குறைகளை எழுதி மனுக்களாக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

    இந்நிலையில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கல்லுக் காட்டுவளவு சூரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மற்றும் அவரது தம்பி ராஜி மற்றும் உறவினர்கள் 20 பேர் தங்களது கை குழந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வெள்ளையன் போலீசாரிடம் கூறியதாவது:-

    சூரப்பள்ளி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 54 சென்ட் பூர்வீக சொத்து உள்ளது. இதனை கடந்த 1999-ம் ஆண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் நாங்கள் சமமாக பாகப்பிரிவினை செய்து கொண்டபோது நிலம் அளவு சரியாக இருந்தது.

    இந்நிலையில் சிலர் எங்களது நிலத்தில் சுமார் 8 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டனர். இது குறித்து கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகினோம். என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவே இங்கு வந்தோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு 8 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார், தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 20 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    5 குழந்தைகள் உட்பட 20 பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×