search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLV Rocket"

    • தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள்.
    • செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    சென்னை:

    பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

    ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    'இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை 356 கிமீ  வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்' என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே 2 செயற்கை கோள்களும் வெளியேறி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தகவல் இழப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
    • எடை குறைந்த 2 செயற்கை கோள்களுடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

    சென்னை:

    விண்வெளி ஆய்வில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து வருகிறது.

    குறிப்பாக தகவல் தொலைதொடர்பு மற்றும் வழிகாட்டி செயற்கை கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதற்காக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சர்வதேச விண்வெளித்துறையில் சிறிய செயற்கை கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கை கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.

    இதன் எடை அதிகபட்சம் 120 டன். 34 மீட்டர் உயரமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ராக்கெட் சிறிய ரக செயற்கைகோளுக்காக வடிவமைக்கப்பட்ட எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் முடிந்ததும் காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக பறந்து சென்றது.

    எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து எடை குறைந்த 2 செயற்கை கோள்களையும் பிரிக்கும் பணிகளும் வெற்றிகரமாக நடந்தன. இதையடுத்து அந்த 2 செயற்கை கோள்களை புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தும் ஏற்பாடுகள் நடந்தன. முதல் 12 நிமிடங்களில் இந்த பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2 செயற்கை கோள்களில் இருந்தும் சிக்னல் கிடைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ராக்கெட்டின் முதல் 3 நிலைகள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டன. ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்கள் பிரிந்து சென்றதும் வெற்றிகரமாகவே நடந்தது. அதன்பிறகே தகவல் இழப்பால் செயற்கை கோள்களை இஸ்ரோ விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள இயலவில்லை.

    தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள். முதல் கட்ட ஆய்வில் ராக்கெட்டின் 4-வது நிலையில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

    அதாவது ராக்கெட்டில் இருந்து பிரியும் செயற்கை கோள் குறிப்பிட்ட நேரத்தில் பிரிய வேண்டும். ஆனால் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே 2 செயற்கை கோள்களும் வெளியேறி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தகவல் இழப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

    எடை குறைந்த 2 செயற்கை கோள்களுடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதுகுறித்து இஸ்ரோ சேர்மன் சோம்நாத் கூறியதாவது:-

    எதிர்பார்த்தபடி எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் அனைத்து பகுதிகளும் வெற்றிகரமாக இருந்தன. ராக்கெட்டின் 3 பகுதிகளும் வெற்றிகரமாக செயல்பட்டன. ஆனால் திட்டத்தின் கடைசி பகுதியில் சில தகவல் இழப்புகள் ஏற்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த ராக்கெட் அதன் பாதையில் சென்று செயற்கை கோள்களை தனித்தனியாக பிரித்துவிட்ட போது கை தட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களே நீடித்தது.

    ராக்கெட்டின் கடைசி பாகத்தில் தகவல் இழப்பு ஏற்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்தில் மூழ்கினார்கள். செயற்கை கோள்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த அவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

    இன்று விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்பு இ.ஒ.எஸ்-02 செயற்கை கோளானது 145 கிலோ எடை கொண்டது. இது கடலோர நிலப் பயன்பாடு ஒழுங்குமுறை நகர்ப்புற கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாக படம் பிடிக்க முடியும்.

    இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் ஆசாதிசாட் எனும் கல்விசார் செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவர்கள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×