search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Philip Kotler"

    இந்தியாவின் வளர்ச்சிக்காக அயராமல் தன்னலமற்ற சேவையாற்றியதாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பிலிப் கோட்லெர் விருது இன்று வழங்கப்பட்டது. #PMModi #Modireceives #PhilipKotler
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் கெல்லோக் வர்த்தகவியல் மேலாண்மை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) துறையில் வல்லுனரான பிலிப் கோட்லர் என்பவர் பேராசிரியராக உள்ளார்.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற இவரது நினைவாக சிறந்த விளம்பர நிறுவனங்கள், சந்தைப்படுத்துதல் துறை நிபுணர்களுக்கு ஆண்டு தோறும் ‘பிலிப் கோட்லர் விருது’ வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டில் இருந்து உலகளாவிய அளவில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சிறப்பான சேவையாற்றும் ஒரு நாட்டின் தலைவருக்கும் இவ்விருதினை அளிக்க தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில், கடந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியாவின் வளர்ச்சிக்காக அயராமல் தன்னலமற்ற சேவையாற்றியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  இன்று ‘பிலிப் கோட்லெர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பட்டயத்தையும், விருதையும் பிரதமர் மோடி டெல்லியில் இன்று பெற்று கொண்டார்.

    பிலிப் கோட்லர்

    ‘நரேந்திர மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) என்னும் மகத்தான திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் இந்தியா குறிப்பிடத்தக்க நாடாக அறியப்படுகிறது.  மேலும், தகவல் தொழில்நுட்பம், கணக்கியல் மற்றும் நிதித்துறைக்கான சர்வதேச சேவையளிக்க கூடிய மனித ஆற்றலை அதிகமாக பெற்றுள்ள நாடாகவும் அவரால் இந்தியா உயர்ந்துள்ளது.

    சமூக நலத்திட்டத்தின் பலன்கள் மற்றும் நிதி ஒருமயப்படுத்தும் ஆதார் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்திய மோடியின் தொலைநோக்கு சிந்தனையால் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு  இன்று டிஜிட்டல் இந்தியாவாக அந்நாடு உருவெடுத்துள்ளது.

    மேலும், மேக் இன் இந்தியா, ஸ்ட்ராட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, சுவாச் பாரத் என அவர் கொண்டுவந்த திட்டங்களால் உலகளாவிய அளவில் உற்பத்தி மற்றும் வர்த்தக மையங்களில் ஒன்றாக இந்தியா இன்று பார்க்கப்படுகிறது.

    இவ்வகைகளில் நாட்டுக்கு மிகசிறப்பான தலைமையை தந்ததுடன்,  அயராத ஆற்றலுடன் இந்தியாவுக்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையால் அந்நாட்டின் பொருளாதார, சமூக, தொழில்நுட்பத்துறைகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன’ என இந்த விருதுடன் அளிக்கப்பட்ட பாராட்டுப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பேராசியர் பிலிப் கோட்லெர் தற்போது மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜகதிஷ் ஷேத் பிலிப் கோட்லெரின் சார்பில் இந்த விருதை பிரதமர் மோடியிடம் இன்று அளித்தார். #PMModi #Modireceives #PhilipKotler #PhilipKotleraward
    ×