search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambitaangayaa Kilambitaangayaa"

    ரசாக் இயக்கத்தில் ரத்தீஷ் - தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா படத்தின் விமர்சனம். #KilambitaangayaaKilambitaangayaa
    நண்பர்கள் இருவர் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்துகின்றனர். நிறுவனம் நஷ்டத்தில் போவதாகக் கூறி, தப்பான கணக்கு காட்டி தனது நண்பரை ஏமாற்றப் பார்க்கிறார். தன்னை ஏமாற்ற நினைப்பதை அறிந்து கொள்ளும் அவரது நண்பர் தனக்கு சேர வேண்டிய தொகையை கேட்டும் கொடுக்காததால், அவரை பழிவாங்க முடிவு செய்கிறார். 

    இதுகுறித்து தனது உதவியாளர் அனு மோகனிடம் கேட்க, அவர் முன்னாள் ரவுடிகளான சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட 4 பேரை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த ரவுடிகள் மூலம், தனக்கு பணம் தராத தனது கூட்டாளியின் மனைவி, மகளை கடத்தி வர திட்டமிடுகிறார். 

    வயதான காரணத்தால் கடத்தல் தொழில் அவர்களுக்கு செட்டாகவில்லை. இதையடுத்து நாயகன் ரித்தீஷ் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மனைவி, மகளை கடத்துகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு போன் செய்யும் கடத்தல்காரர்கள், அவரை மிரட்டுகின்றனர். 

    அதேநேரத்தில் பின்னணியில் டிவியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் தான் என்று போலீசார் முடிவு செய்து அவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கின்றனர். 



    இதையடுத்து நாயகன் உள்ளிட்ட கடத்தல்காரர்கள் அனைவரும் காட்டுக்குள் தப்பி ஓடுகின்றனர். அங்கு காட்டுவாசியான மன்சூர் அலிகானிடம் சிக்கிக் கொள்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்க பாக்யராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். 

    கடைசியில் நாயகன் உள்ளிட்ட அனைவரும் போலீசில் சிக்கினார்களா? அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், அனுமோகன் ஆகிய அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களின் வெகுளித்தனமான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகனாக வரும் ரத்தீஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    போலீஸ் அதிகாரியாக கே.பாக்யராஜ் வந்த பிறகு திரைக்கதை சூடுபிடித்திருக்கிறது. அரசியல்வாதியாக வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், காட்டுவாசித் தலைவராக வரும் மன்சூரி அலிகான் ஆகியோர் திரைக்கதைக்கு ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

    கடத்தல்காரர்களிடம் சிக்கும் அஸ்மிதாவின் நடிப்பு அபாரம். மற்றொரு நாயகியான தாரா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில், பல திறமையான இயக்குனர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரசாக். நடிகர்களை தேர்வு செய்து அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதி மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். 



    ஸ்ரீகாந்த்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா’ காமெடி கலாட்டா.
    தமிழ், மலையாள மொழிகளில் பிரபல நாயகியான இனியாவின் தங்கை தாரா, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். #Thara
    ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. 

    முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியிருக்கும் இந்த படத்தை ரசாக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். 

    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.



    இந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில், “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம். இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான். படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.” என்று கூறினார்.

    மேலும், “தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.” என்று அக்கா இனியா அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார். #Kilambitaangayaa Kilambitaangayaa #Thara
    ×