search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Space Research Organization"

    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது
    • ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் ராஞ்சியில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    இதற்காக உலகெங்கிலும் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் இன்னமும் தொடர்ந்து குவிந்து வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகரும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளருமான டெஹ்ஸீன் பூனாவாலா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 3 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என கூறி, அவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரை, தான் கூறும் விவரங்களை சரிபார்க்குமாறு சவால் விடும் வகையில் கூறியிருந்தார்.

    இவர் கூறியது உண்மையென நம்பி சில அரசியல் விமர்சகர்களும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும், தொலைக்காட்சி பேட்டியிலும், சமூக வலைதளங்களிலும், மத்திய அரசை கிண்டல் செய்தும், விமர்சித்தும் கருத்துக்களை வெளியிட்டனர்.

    ஆனால், ஆய்வில் டெஹ்ஸீன் பூனாவாலா கூறியது உண்மையல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.

    உண்மை என்னவென்றால், சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன.

    அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது. பல காரணங்களுக்காக பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

    இதன் காரணமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்களுக்கு

    சம்பளம் தர இயலவில்லை. இதனை இஸ்ரோவுடன் தொடர்புபடுத்தி சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவ ஆரம்பித்தன.

    டெஹ்ஸீன் தவறாக புரிந்து கொண்டு கூறியது போல் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளம் தரப்படவில்லை என நம்ப ஆரம்பித்தனர். உண்மையில் ஒவ்வொரு மாதமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாதத்தின் கடைசி தேதியன்று அம்மாத சம்பளம் எந்தவித தடையும் இன்றி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் செய்திகளிலும் வரும் அனைத்து செய்திகளும் உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×