search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gun-Making Unit"

    குஜராத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். #PMModi #GunMakingUnit #PrivateSectorHowitzer
    ஹஜிரா:

    மத்திய அரசு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கிவருகிறது. இதன் அடிப்படையில் லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனம் 2017-ம் ஆண்டு ராணுவ அமைச்சகத்திடம் ‘கே9 வஜ்ரா’ என்ற ராணுவ பீரங்கிகள் தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி ரூ.4,500 கோடியில் 100 பீரங்கிகள் வழங்க வேண்டும்.

    இதற்காக குஜராத் மாநிலத்தில் சூரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹஜிரா என்ற இடத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவன உற்பத்தி வளாகத்தில் 40 ஏக்கரில் பீரங்கி உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் தொழிற்சாலை வளாகத்தையும், தயாராகிவரும் பீரங்கிகளையும் அவர் பார்வையிட்டார்.



    கே9 வஜ்ரா ராணுவ பீரங்கியின் தொழில்நுட்பம் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தமும் இந்த விழாவில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், கொரிய மந்திரி வாங்க் ஜங் ஹாங், எல் அண்டு டி குழும தலைவர் ஏ.எம்.நாயக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டர் வலைத்தளத்தில், “இந்த நிறுவனத்தின் முழு அணியினரையும் இதற்காக நான் பாராட்டுகிறேன். இங்கு கே9 வஜ்ரா பீரங்கி உற்பத்தி செய்யப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கும், இந்திய ராணுவத்துக்கும் முக்கிய பங்காற்றுவதாகும். பாதுகாப்பு துறையிலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதே நமது முயற்சி. தனியார் நிறுவனங்களும் இதனை ஆதரிக்கும் நோக்கத்தில் தனது பங்களிப்பை வழங்குவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு, ஒரு பீரங்கியில் ஏறி நின்று அதனை தானே படம்பிடித்த வீடியோவையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதில், ‘எல் அண்டு டி நிறுவனத்தில் பீரங்கியை சோதனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் கே9 வஜ்ரா பீரங்கிக்காக 400 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சுமார் 13 ஆயிரம் உதிரிபாகங்களை தயாரிக்கின்றன. இதில் வெளிநாட்டு உதவியின்றி அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிறது.

    கே9 வஜ்ரா பீரங்கி 50 டன் எடையும், 47 கிலோ குண்டுகளை 43 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறனும் கொண்டது என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #GunMakingUnit #PrivateSectorHowitzer
    ×