search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooperative societies"

    கூட்டுறவு சங்கங்கள் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தந்தை , மகளை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பரசேரியை அடுத்த நுள்ளி விளையைச் சேர்ந்தவர் ஆலிவர், (வயது 58). கோவையை தலைமையிடமாக கொண்டு ஆலிவர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் ஒன்றை தொடங்கினார். குமரி மாவட்டத்தில் இதன் கிளைகள் ராஜாக்கமங்கலத்தில் தலைமையகமாக கொண்டு தொடங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 15 கிளைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மண்டல இயக்குனராக ஆலிவரும், மண்டல மேலாளராக ஆலிவரின் மகள் பவுலின் டோராவும் (28), இயக்குனராக மருமகன் தினேசும் (35), ஆலோசகராக ஆலிவரின் நண்பர் பார்த்த சாரதியும் (55) பணிபுரிந்து வந்தனர்.

    இந்த நிறுவன கிளை ஒன்றில் காரங்காடு அருகே செருப்பன்கோட்டையைச் சேர்ந்த நிஷா என்பவர் மானேஜராக பணியாற்றி வந்தார். அவர், இந்த நிறுவனம் குறித்து குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மத்திய அரசின் அனுமதியுடன் நடப்பதாக ஆலிவரும், அவரது மகளும் என்னிடம் தெரிவித்தனர். இங்கு பணியில் சேர ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்றனர். மேலும் மாதந்தோறும் 20 பங்குதாரர் களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பங்குதாரர்களிடமிருந்து ரூ.500 முதல் ரூ.5000 வரை வசூலிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.

    இது தவிர ரூ.3 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டுமென்றும் கூறினர். நான், இங்கு பணியில் சேர்ந்து 70 பங்குதாரர்களையும் 47 தொடர் வைப்பு உறுப்பினர்களையும் சேர்த்தேன். இந்த நிலையில் கோவையில் செயல்பட்டு வந்த ஆலிவரின் நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டு கடந்த ஓராண்டாக செயல்படவில்லை என்பது எனக்கு தெரியவந்தது.

    எனவே நான், நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தையும், பங்குதாரர்கள் அளித்த பணம் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அப்போதுதான் இந்த நிறுவனம் மத்திய அரசின் அனுமதி பெறாததும் தெரிய வந்தது.

    மத்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம் என்று கூறி இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி பணத்தை வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

    இந்த மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கூட்டுறவு சங்கம் நடத்தி ஆலிவரும், அவரது மகள், மருமகன் மற்றும் நண்பர் பணமோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    முதல் கட்டமாக ஆலிவரும், அவரது மகள் பவுலின் டோராவும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் ஆலிவரும், அவரது மகள் பவுலின் டோராவும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஆலிவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது மகள் பவுலின் டோரா தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆலிவரின் மருமகன் தினேஷ் தற்போது வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவரை இந்தியாவிற்கு வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட் டுள்ளனர். இதுபோல ஆலிவரின் நண்பர் பார்த்தசாரதி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    ×