search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Circuit breaker"

    • மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.
    • கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.

    அங்குள்ள மலைவாழ் மக்கள் ராசிபுரம் போன்ற ஊர்களுக்கு கரடு முரடான பாதை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

    இந்நிலையில் தரை மட்டத்திலிருந்து 6 கி.மீ. உயரத்தில் உள்ள கீழூரில் இயங்கி வந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட் களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை மலைவாழ் மக்களே கீழே கொண்டு வந்து மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் புதிய ட்ரான்ஸ்பார்மரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு கீழூருக்கு கொண்டு செல்வதற்காக போதமலை அடிவாரத்தில் வைத்திருந்தனர். மலைப்பகுதியில் உள்ள கீழூருக்கு கரடு முரடான பாதையில் கொண்டு செல்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று போதமலை அடிவாரத்தில் இருந்து கீழூருக்கு 750 கிலோ எடையுள்ள புதிய டிரான்ஸ்பர்மரை 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தோளில் சுமந்து சென்றனர்.

    வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆர்.எம். துரைசாமி, ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் நாமகிரிப்பேட்டை ரவி, புதுப்பட்டி விக்னேஷ்வரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன், வனிதா உள்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அனுப்பி வைத்தனர்.

    இன்னும் 3 அல்லது 4 நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் கீழூர் பகுதியில் வைக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெறும் என்று மின்வாரியத் துறையினர் தெரிவித்தனர். இதனால் 20 நாட்களாக மின் வசதி இல்லாமல் இருந்த கீழூர் பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    ×