search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chetan Chauhan"

    ரவி ஷாஸ்திரி சிறந்த வர்ணனையாளர், ஆஸ்திரேலியா தொடருக்கு முன் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என சேத்தன் சவுகான் வலியுறுத்தியுள்ளார். #RaviShastri
    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இந்தத் தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசியில் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர் என்ற விமர்சனமும் விராட் கோலி, ரஹானே, புஜாரா, ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    ஆனால், இதற்குப் பதில் அளித்துப் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கடந்த 15 ஆண்டுகளில் இப்போது விராட் கோலி தலைமையில் இருக்கும் இந்திய அணியே வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்ததில் சிறந்த அணி, குறைந்த காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்த கருத்து மீதும் பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வைத்தனர்.

    இந்நிலையில் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுகான் ஆஸ்திரேலியா தொடருக்குள் ரவி ஷாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேத்தன் சவுகான் கூறுகையில் ‘‘இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி ஷாஸ்திரியை ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக நீக்கிவிட வேண்டும். ரவி ஷாஸ்திரி நல்ல கிரிக்கெட் வர்ணனையாளர். அவர் அந்த பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். இங்கிலாந்து தொடரில் இரு அணிகளுமே சமபலம் கொண்டதாக இருந்ததாகவே காணமுடிந்தது. ஆனால், இந்திய அணி டெய்ல்-எண்டர்ஸ்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டது.

    இப்போதுள்ள இந்திய அணியை கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதைநான் ஏற்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை கடந்த 1980-களில் இருந்த இந்திய அணிதான் சிறப்பான அணி’’ என்றார்.
    ×