search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chellammal"

    பெண்கள் இன்று நகரின் பல இடங்களில் ஆட்டோவை ஓட்டி செல்வதை காண முடிகிறது. இவர்களது வரிசையில் பஸ் அல்ல லாரியை, அதுவும் 10 டயர்கள் கொண்ட டாரஸ் (கனரக) லாரியை ஓட்டி சாதனை படைத்துள்ளார் ஒரு பெண்.
    பேரையூர்:

    பெண்கள் இன்று கால்பதிக்காத துறைகளே இல்லை. விவசாயத்திற்கு வயலில் இறங்கியது முதல் ராக்கெட்டில் விண்வெளியில் கால்பதித்தது வரை பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக இன்று பெண்கள் திகழ்கின்றனர். அரசியலிலும் இவர்களது பங்கு தற்போது அதிகரித்து வருகிறது.

    இலகுவான வேலைகளுக்குத்தான் பெண்கள் லாயக்கு. அவர்களால் கடினமான வேலைகளை செய்ய முடியாது என்று பேசி வந்தவர்களின் வாயை அடைத்தார் வசந்தகுமாரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பஸ்சை ஓட்டி பல பெண்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார்.

    இதன் பயனாக இன்று நகரின் பல இடங்களிலும் ஆட்டோவை பெண்கள் ஓட்டி செல்வதை காண முடிகிறது. இவர்களது வரிசையில் பஸ் அல்ல லாரியை, அதுவும் 10 டயர்கள் கொண்ட டாரஸ் (கனரக) லாரியை ஓட்டி சாதனை படைத்துள்ளார் ஒரு பெண்.

    அவரது பெயர் செல்லம்மாள் (வயது48). சேலம் மாவட்டம் மேற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ரெங்கையாவின் மனைவியான செல்லம்மாள் 2 மகன்களுக்கு தாய்.

    கணவர் உடல்நலம் குன்றியதால் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட செல்லம்மாள் தேர்ந்தெடுத்தது வாகனம் ஓட்டும் தொழில். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெற்ற அவர் முதலில் சிறிய ரக வாகனங்களை இயக்கத் தொடங்கினார்.

    செல்லம்மாள் ஓட்டி வரும் 10 டயர் லாரி.

    நாளடைவில் வருமானத்திற்காக கனரக வாகனங்களை ஓட்ட ஆரம்பித்தார். தற்போது 10 டயர் கொண்ட டாரஸ் லாரியை ஓட்டி இந்தியா முழுவதும் செல்லம்மாள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    மும்பையில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு 10 டயர் லாரியை ஓட்டி வந்தார் செல்லம்மாள். கப்பலூர் மேம்பாலம் அருகே வந்த போது தனியார் பஸ் லாரியின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணாடி உடைந்தது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்துக்கு தனியார் பஸ்தான் காரணம் என தெரியவந்தது. ஆனால் இந்த விபத்து தான் செல்லம்மாளின் சாதனையை நமக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

    சாதனை குறித்து செல்லம்மாள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நான் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று வருகிறேன்.

    அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் எனக்கு பக்கபலமாக உள்ளனர். என்னைப்போல நிறைய பெண்கள் டிரைவராக உருவாக வேண்டும் அப்போதுதான் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும் என்றார்.

    செல்லம்மாள் உழைப்பில் அவரது மகன்கள் என்ஜினீயரிங் படிப்பு படித்து வருகிறார்கள்.

    ×