search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Construction Study"

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மதுரை தோப்பூரில் மத்திய கட்டுமானக்குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது பரிசோதனைக்காக மண் மாதிரியும் எடுத்தனர்.
    திருப்பரங்குன்றம்:

    மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் அமைய உள்ளது. ரூ.1500 கோடி மதிப்பீட்டில் சுமார் 197.28 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

    இதற்கான நிலத்தை வருவாய்த்துறையினர் ஒதுக்கீடு செய்துள்ளனர். அந்த இடத்தில் உள்ள 67-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 3 மின் மாற்றிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல கூத்தியார்குண்டு விலக்கு மற்றும் தனக்கன்குளம் மிசோரியர் மில் பகுதி ஆகிய இடங்களில் 60 அடி அகல சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அந்த பகுதியில் உள்ள நிலங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய அரசின் மருத்துவ கட்டுமானக்குழுவைச் சேர்ந்த 7 பேர் இன்று மதுரை வந்தனர். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் சென்று ஆய்வு செய்தனர்.

    அந்த இடத்தின் நிலத்தடி நீர், மின்சாரம், குடிநீர் போன்றவை குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன், கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் சுரேஷ் ஆகியோர் ஆய்வில் பங்கேற்று மத்திய கட்டுமான குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.

    தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் மண் மாதிரியை கட்டுமான குழுவினர் ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.

    மத்தியக்குழுவின் ஆய்வு குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருது பாண்டியன் கூறுகையில், ஆய்வுக்கு வந்துள்ள குழு தான், மதுரையில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டுமானம் செய்தது. இந்த குழு மண் மாதிரி அறிக்கையை 2 நாளில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். அதன் பிறகு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். #AIIMS #AIIMSinMadurai
    ×