search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amravati river"

    அமராவதி ஆற்றில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கரூர் மாவட்டத்திலுள்ள டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக உணவுபாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஞ்சப்பட்டி அருகே வயலூர் கிராமத்தில் அமையவுள்ள தனியார் சிமெண்டு ஆலை தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் குறித்து பொதுமக்களிடையே பரவலாக தகவல் தெரிவிக்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் தாலுகா செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், செட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், கரூரின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது. இந்த நிலையில் கரூர் நகர் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளதால், ஆற்றில் வரும் நீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும் கழிவுநீர் ஆற்றில் திறந்து விடப்படுவதால் நீர் மாசடைகிறது. எனவே அமராவதி ஆற்றினை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. தன்னார்வலர்கள் சார்பில் 50 பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்து நாங்கள் தூர்வாரவும் அனுமதிக்க மறுக்கின்றனர். இனியும் நடவடிக்கை இல்லையெனில் வருகிற பிப்ரவரி 4-ந்தேதி முதல் அமராவதி ஆற்றினை தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 
    ×