என் மலர்
வழிபாடு
- வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
- வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
முன்னதாக தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. கப்பரையானது சுமார் 5 கி.மீ. தூரம் கொண்டு வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.
சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பின்னர், இரவு சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை முதலே கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாய்மேடு போலீசார் செய்திருந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
மணவாளக்குறிச்சி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம் ஆகியவை நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை போன்றவை நடக்கிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.
- அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகையொட்டி தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. முன்னதாக காலையில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் தேவஸ்தான ஆஸ்தான ஜோதிடர் சிவக்குமார் சர்மா எழுதிய காணிபாக்கம் தேவஸ்தானம் பஞ்சாங்கம் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. காணிப்பாக்கம் கிராம அர்ச்சகர் மோகன் ராமலிங்கம், பஞ்சாங்கம் படித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி, வாசு, கோவில் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோன்று ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்கள சமேத பள்ளிகொன்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திலும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
திருப்பதியை சேர்ந்த சிலக்கப்பாட்டி குமார ஆச்சாரியர்களால் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கே.ராமச்சந்திரா ரெட்டி மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
- பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீ காளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு உகாதியை முன்னிட்டு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கார மண்டபத்தில் உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

முன்னதாக வேதப்பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பால், தயிர். பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி கோவில் சார்பில், பக்த கண்ணப்பர் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு, தாரக சீனிவாசுலு மற்றும் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோவில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.
இதில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, சீனிவாசலு, சிறப்பு அழைப்பாளர்கள் சிந்தாமணி பாண்டு, உதய்குமார், சுரேஷ், தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள், தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர்.
- பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி உகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனர் விசேஷ சமர்ப்பணம் செய்தனர். பின்னர் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர்.
தங்க வாசலில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களை கொண்டு வந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் விஷ்வக்சேனரை கொண்டு வந்தனர். அதன்பின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு புது வஸ்திரம் அணிவித்தனர்.
அதன்பின் பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது. தங்கவாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர். இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி, முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பெருநாள் பரிசு வழங்கப்படும் இரவு.
- நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேட்பது.
பெருநாள் பரிசு வழங்கப்படும் இரவு
ரமலான் பிறை முதல் நோன்புப் பெருநாள் முழுவதும் இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் இருந்து, இரவில் உறங்காமலும் இருந்து இறைவணக்கம் புரிந்து வந்தனர். மக்களிடம் ஈவு, இரக்கம் காட்டி வந்தனர். இல்லாதோருக்கு ஈகை (மனம் உவந்து வழங்கப்படும் கொடை, உதவி) அளித்து வந்தனர். எல்லோரிடமும் இணங்கி, நெருங்கி வாழ்ந்தனர். எங்கும் பொறுமை, எதிலும் பொறுமையை நிறைவாக கடைப்பிடித்து வந்தனர்.
ஒரு மாத ரமலான் காலம் முழுவதும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையையும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமையையும் தொய்வில்லாமல் தொடராகச் செய்த நோன்பாளிகளுக்கு நோன்பின் பரிசு பெருநாளின் பிறை கண்ட ஷவ்வால் மாத முதல் இரவு (பெரு நாள் இரவு) அன்று வழங்கப்படுகிறது.
இஸ்லாமியப் பார்வையில் இஸ்லாமிய ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு யாவும் சந்திரனை மையமாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், இஸ்லாமிய மாதக்கணக்கு முதல் பிறை தென்பட்டதில் இருந்து துவங்கி விடுகிறது. முதல் பிறைதான் இஸ்லாமிய மாதத்தின் முதல் இரவாகும். இதன் அடிப்படையில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இரவு முந்தி வருகிறது. பகல் பிந்தி வருகிறது.
ஒரு பிறையில் இருந்து அடுத்த பிறை வரைக்கும் ஒரு நாள் ஆகும். இதே பாணியில் பெருநாள் பிறை பார்க்கப்பட்ட அன்றைய இரவுதான் பெருநாள் இரவாகும். மறுநாள் வருவது பெருநாள் பகலாகும். பெருநாள் பகலுடன் ஒருநாள் நிறைவு அடைந்துவிட்டது. மீதி அடுத்த நாளின் இரவு துவங்கி விடுகிறது.
பெருநாள் இரவு அன்று நோன்பாளிகள் இறைவனிடம் தங்களுக்கு நோன்பு பரிசாக சொர்க்கத்தை கேட்க வேண்டும். மேலும், நரகத்தில் இருந்து பாதுகாப்புத்தேட வேண்டும். இந்த இரண்டும் நோன்பாளிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும் .
நீங்கள் தேவையற்றிருக்க முடியாத இரண்டு விசயங்கள் உள்ளன.
1) நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேட்பது.
2) நீங்கள் இறைவனிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவது ஆகும். இதை ரமலானில் அதிகமாகச் செய்து வாருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸல் மான் பார்ஸீ (ரலி), நூல்: தர்வீப்)
பிரார்த்தனை ஏற்கப்படும் ஐந்து இரவுகள்:
1) வெள்ளிக்கிழமை இரவு
2) நோன்புப் பெருநாள் இரவு
3) ஹஜ்ஜூப் பெருநாள் இரவு
4) ரஜப் மாத முதல் இரவு
5) ஷஅபான் மாத பாதி இரவு
இறைவணக்கம் புரிய சிறந்த ஐந்து இரவுகள்:
1) துல்ஹஜ் மாதம் 8-ம் நாள் இரவு
2) துல்ஹஜ் மாதம் ஒன்பதாவது தினமான அரபா நாள் இரவு
3) ஹஜ்ஜூப் பெருநாள் இரவு
4) நோன்புப் பெருநாள் இரவு
5) ஷஅ பான் மாத 15-ம் நாள் இரவு ஆகிய ஐந்து இரவுகளாகும்.
இந்த இரவுகளில் இறைவணக்கம் புரியலாம். இறைவனை துதிக்கலாம். இறைவனை நினைக்கலாம். இறைவனை பெருமைப்படுத்தலாம். இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டலாம். இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம்.
இந்த இரவுகளுக்கென்று சிறப்புத் தொழுகைகளோ, சிறப்பு பிரார்த்தனைகளோ எதுவுமே கிடையாது. இந்த இரவுகளை உயிர்ப்பிக்க எளிய வழி ஒன்று உள்ளது. அது வளமையான வணக்க வழிபாட்டு முறையாகும். அதுயாதெனில், அன்றைய இரவுகளில் இஷா எனும் இரவுத் தொழுகையையும், பஜ்ர் எனும் அதிகாலைத் தொழுகையையும் இமாமுடன், ஜமாத்துடன் இணைந்து நிறைவேற்றினால் போதும். அன்றைய இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கிடைத்துவிடுகிறது.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 28 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை இரவு 8.34 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அசுவினி காலை 7.16 மணி வரை. பிறகு பரணி.
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருப்புவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-பிரீதி
மிதுனம்-உயர்வு
கடகம்-நட்பு
சிம்மம்-அமைதி
கன்னி-புகழ்
துலாம்- சுகம்
விருச்சிகம்-சுபம்
தனுசு- ஆதரவு
மகரம்- உயர்வு
கும்பம்-வெற்றி
மீனம்-போட்டி
- ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.
- குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும்.
சாயா கிரகங்களான ராகு கேதுக்களே சர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்த இடமே ஜாதகரின் யோகம் மற்றும் அவயோகத்தை நிர்ணயிக்கின்றன. ஏனெனில் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கர்ம வினைப் பதிவை சுய ஜாதகத்தில் உள்ள ராகு கேதுக்களே வெளிப்படுத்துகின்றன. அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.
யார் இந்த ராகு/கேதுக்கள்?
விஞ்ஞான ரீதியான விளக்கம்
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு குரியனையும் சுற்றுகிறது. ஏனைய கிரகங்களும் அவ்வாறே சூரியனை சுற்றி வருகிறது. பூமியின் துணைகிரகமான சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது பூமியும் சந்திரனும் ஓரே நேர்கோட்டில் வரும் போது ஓன்றையொன்று இரண்டு இடங்களில் வெட்டிக் கொள்ளும் வெட்டுப்புள்ளியானது ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமைந்து இருக்கும். அந்த வெட்டுப்புள்ளியே ராகு, கேதுக்கள்.
சந்திரனின் வடக்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி ராகுவாகவும் தெற்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி கேதுவாகும். இந்த இரு புள்ளிகளாகிய ராகுவும் கேதுவும் ஒளியில் ஏற்படும் நிழல் கிரகம் என்பதால் இவற்றை சாயா கிரகங்கள் என்கிறோம். நிழல் எவ்வாறு எதிர் திசையில் நகர்கிறதோ அவ்வாறே ராகு கேதுக்கள் மற்ற கிரகங்கள் சுற்றும் திசைக்கு எதிரில் சுற்றுகிது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றின் ஈர்ப்பு சக்தி ஒருங்கிணைப்பால் பிறக்கின்ற விசை சக்தியான ராகு, கேதுக்கள் மனிதர்களின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றும் அளவிற்கு பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
புராண விளக்கம்
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்து பெற்ற அதத்தை மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து தேவர்களுக்கு மட்டுமே அதிகமாக பரிமாறிக் கொண்டு இருந்ததை கண்ட "ஸ்வர்பானு" எனும் அசுரன் தன் உருவத்தை தேவர் போல் மாற்றிக் கொண்டு தேவர்களுடன் அமர்ந்து அமுதத்தை உண்டார். இதனை பார்த்த சூரியனும், சந்திரனும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு விடம் கூற தன்னிடம் இருந்த சட்டுவத்தால் தலையை துண்டித்தார். தலையும் உடலும் பிரிந்தாலும் அமுதம் உண்ட காரணத்தால் அவன் இறக்கவில்லை. பின்பு மனம் இரங்கிய மகாவிஷ்ணு உடலை ஒருங்கிணைத்த போது அவசரத்தால் மனித தலை பாம்பு உடல், பாம்பு தலை மனித உடல் என்று இணைத்து விட்டார். மனித தலை, பாம்பு உடல் ராகு என்ற தன்மையும், பாம்பு தலை, மனித உடல் கேது என்ற தன்மையும் பெற்று அழியா தன்மை அடைந்தனர். பூஜை பலத்தால் நிழல் கிரகங்களாக நவகிரக அந்தஸ்து பெற்றனர்.
சர்ப்ப தோஷத்தை கண்டறியும் எளிய வழி முறைகள்
சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சந்தேக புத்தி இருக்கும். எதையும் திருட்டுத்தனமாக செய்வார்கள். அதீத தாம்பத்ய உணர்வு, ரகசிய உறவு, நாக்கை நீட்டிக் கொண்டே இருப்பவர், நாக்கை நீட்டி உண்பவர் , வஞ்சம் தீர்ப்பவர்களாக இருப்பார்கள். மிகச் சுருக்கமாக பிள்ளைகளால் பிரச்சினைகளை, மன உளைச்சலை அனுபவிப்பவர்களுக்கு சூட்சம முறையான சர்ப்ப தோஷம் நிச்சயம் இருக்கும்.

சர்ப்பங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஏழாமிடம், இரண்டு எட்டா மிடம் ஆகிய இடங்களில் அமர்வதால் ஏற்படும் தோஷம் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் அல்லது ராகு கேது தோஷம்.
3-ல் இருந்தால் சகோதர வழி தோஷம்
4-ல் இருப்பதால் ஏற்படுவது மாதூர் தோஷம், சொத்து பிரச்சினை
5-ல் இருப்பதால் ஏற்படுவது புத்திர தோஷம்
9-ல் இருந்தால் பிதுர் தோஷம்
ராகு கேது தங்களுடன் சேர்ந்த கிரகங்களின் காரகத்துவங்களையும், அதன் ஆதி பத்திய காரகத்துவங்களையும் பாதிப்படைய செய்வதனால் ஏற்படுத்தும் சர்ப்ப தோஷங்கள். ராகு கேது தங்களின் நட்சத்திரங்களை மற்ற கிரகங்களுக்கு கொடுப்பதன் மூலம் ஏற்படும் தோஷங்கள். ராகு கேதுக்கள் அசுப கிரகங்களின் ராசி யில் உள்ள போது ஏற்படுத்தும் தோஷங்கள்.
ராகு கேது உச்சம் பெற்று அதன்மூலம் ஏற்படும் தோஷங்கள். இங்கே கூறப்படாத இடங்களான 6, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷங் களை ஏற்படுத்துவதில்லை. என்றாலும் அவர்களின் காரகத்துவம் சார்ந்த அவர் பெற்ற சுப அசுப தன்மையின் அடிப்படையில் அந்த பாவக காரகத்துவங்கள் பாதிப்படையும். ராகு, கேதுக்கள் சுபத் தன்மை அல்லது பலம் இழக்கும் அமைப்புகள் ராகு, கேது பகை நீசமாக இருந்தால் மட்டுமே உடன் இணையும் கிரகங்கள் பாதிப்படையாது. ஆனாலும் நீசமான சர்ப்ப கிரகங்கள் ஏதாவது நீசபங்க விதிகளின் படி நீசபங்கம் ஆனால் ராகு கேதுக்கள் பலம்பெற்று விடும்.
குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும். அதாவது குருவோடு ராகு/கேதுக்கள் இணையும் போது அவர்கள் குரு சண்டாள யோகம் ஏற்படுத்தி குருவைப் பார்க்கிறார்கள்.
குரு ராகுவையோ கேதுவையோ சமசப்த மமாக பார்த்தால் குருவின் பாதி பலத்தை ராகு-கேதுக்கள் எடுத்துக்கொண்டு குருவை பலமிழக்கச் செய்து விடுகிறார்கள். ஆக குரு பகவானின் ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் ராகு கேதுக்களுக்கு கிடைக்கும் போது மட்டுமே ராகு/கேதுக்கள் சுபத்தன்மை பெறுகிறார்கள்.
ராகு கேதுகள் எந்த கிரகத்துடனும் சேராத போதும், ராகு கேதுவின் நட்சத்திரத்தில் வேறு கிரகங்கள் இல்லாதபோதும் பலம் இழக்கிறார்கள்.
லக்ன சுபர்களின் சாரம் பெரும் போதும் சுபர்களால் பார்க்கப்படும் போதும் சுபர்கள் உடன் இணையும் போதும் திதி சூனியம் அடைந்த கிரகத்தின் சாரம் பெறும்போதும் தோஷமுள்ள இடத்தில் இருந்து தோஷ மில்லாத இடத்திற்கு பாவகமாற்றம் அடையும் போது பலம் இழக்கும்.
6 12-ல் உச்சம் பெறாமல் அமரும்போதும் 5, 9-ல் பலம் இன்றி அமரும்போதும் 10, 11 பாவகத்தில் அமரும் போதும் முழு தீய பலன்களையும் தருவதில்லை.
நன்மை மட்டுமே செய்யும் ராகு-கேது அமைப்புகள்.
ராசி அதிபதியோடு சேர்ந்தாலும் பார்த்தாலும், ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு, கேது நின்ற நட்சத்திர அதிபதிகள் ஆட்சி ,உச்சம் பெற்றாலோ லக்னத்திற்கு திரிகோண, கேந்திரத்தில் அமைந்தாலோ ராகு/கேதுக்கள் சுப பலனை அதிகமாகவும், அசுப பலன்களை குறைவாகவும் செய்கிறது.

ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.சர்ப்ப தோஷத்தை 4 வகையாக பிரிக்கலாம்
உத்தம சர்ப்ப தோஷம்
இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு வெளிப்பார்வையில் தோஷம் உள்ள ஜாதகம் போல் இருந்தாலும் எந்த தீங்கும் செய்யாது. இவர்களின் வம்சாவளியினர் சர்ப்பங்களை ஆராதனை செய்பவர்கள். இவர்களின் குல தெய்வம் கூட புற்றுடன் கூடிய அம்மனாக இருக்கும்.
அதம சர்ப்ப தோஷம்
இந்த வகை சர்ப்ப தோஷம் குழந்தை பிறப்பிற்கு முன்பும் பின்பும் சொல்ல முடியாத வகையில் பிரச்சினை தரும். இவை முழுக்க முழுக்க முன் ஜென்மத்தின் கரும வினைப் பதிவே.
கால சர்ப்ப யோகம்:
கால சர்ப்ப யோகம் என்பது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் அமைந்து இருக்கும். எல்லா கிரகங்களும் ராகுவை நோக்கியே செல்லும். தனித்த ராகு, கேதுவாகவோ, வேறு கிரகங்கள் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இல்லாத போதும் சுப பலனை நடத்திக் கொண்டே இருக்கும் இதை விபரீத ராஜ யோகம் என்றும் கூறலாம்.
இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும். அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள். இந்த அமைப்பு பெற்ற ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும். ராகு, கேதுவின் தசை புத்தி காலத்தில் மிகவும் சிறப்பான பலனை அடைகிறார்கள். உரிய வயதில் கல்வி, திருமணம், குழந்தை பேறு, தொழில் வாய்ப்பு அமையும். இவர்கள் ராகு, கேதுவின் நல்லாசி பெற்ற வர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.
காலசர்ப்ப தோஷம்:
லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் இருக்கும். அனைத்து கிரகங்களும் கேதுவை நோக்கி செல்லும். தோஷம் 33 வயது வரை மட்டுமே அதன் பிறகே திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் போன்ற அனைத்து சுப நிகழ்வும் ஏற்படும். நாள்பட்ட திருமணம் அமைந்த போதும் வாழ்க்கை நிம்மதிக் குறைவாகவே உள்ளது. இவர்கள் 4 அடி ஏறினால் 10 அடி சறுக்கும்.
பரிகாரம் சர்ப்ப கிரகங்களால் சுப பலன்களை அனுப விப்பவர்கள் மேலும் சுபத்தை அதிகரிக்க துன்பங்களை அனுபவிப்பவர்கள் இன்னல்களில் இருந்து விடுபட புற்று வழிபாடே சிறப்பானது. ஒவ்வொரு புற்றில் இருக்கும் சர்ப்பத்திற்கும் ஒவ்வொரு வித சக்தி உண்டு. 10 ஆண்டுகளைக் கடந்த சர்பங்கள் தெய்வத்தன்மை பெறுகின்றன. அந்த சர்பங்களின் உடலில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். அந்த புற்றுக்களில் செய்யும் வழிபாடுகள் காரியசித்தி தரும். மேலும் புற்றுக்குள் பால் ஊற்றாமல் மண் பாத்திரத்தில் ஊற்றுங்கள். புற்றுக்குள் இருக்கும் சர்பத்திற்கு எந்த இடையூறும் இல்லா வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.முறையான புற்று வழிபாடுக்கு பல தலைமுறை சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் வலிமை உண்டு.
- டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும்.
- அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.
இந்தாண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந்தேதி) தொடங்கி வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. இந்த பதிவின்போது, பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.
டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
- பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது.
காலை 6 மணிக்கு ஏழுமலையான், விஸ்வகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தன. மூலவர் ஏழுமலையான் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் 4 மாட வீதிகள் மற்றும் கொடி மரத்தை சுற்றி உலா நடந்தது.
ஏழுமலையானை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்தனர். கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தங்க மண்டபத்தில் யுகாதி ஆஸ்தானம் அறிவியல் பூர்வமாக நடந்தன.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
திருப்பதியில் நேற்று 61,920 பேர் தரிசனம் செய்தனர். 17,638 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
- தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள்(11-ந்தேதி முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும்.
தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






