என் மலர்
வழிபாடு
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- சித்திரை திருவிழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது.
மதுரை:
சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந் தேதிதிக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.
முன்பதிவு
இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்குகோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hree.tn.gov.in இந்து சமய அறநிலையத்துறையத் துறை hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந் தேதி) முதல் 13-ந் தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ -மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
டிக்கெட் கிடைக்குமிடம்
அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்... இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.
டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி- சுந்தரேசுவரரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் குரு மேஷ ராசியில் நிற்கிறார்.
- கிரக அமைப்பு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உருவாகும்.
தமிழர்கள் சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் 38-வது தமிழ் ஆண்டான குரோதி வருடம் ஏப்ரல் 14, 2024 அன்று ஞாயிற்றுகிழமை, திருவாதிரை நட்சத்திரம், சஷ்டி திதியில் பிறக்க உள்ளது. குரோதி வருட கிரக சஞ்சாரங்கள்: (திருக்கணித பஞ்சாங்கப்படி)
குரு:
ஆண்டின் துவக்கத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் மே1, 2024 முதல் ரிஷப ராசிக்கு சென்று கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளைப் பார்வையிடுகிறார்.
சனி:
வருட கிரகங்களில் அதிக வருடம் ஒரு ராசியில் பயணம் செய்யும் கிரகமான சனி பகவான் 29.3.2025 வரை கும்ப ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். மேஷம், சிம்மம், விருச்சிகத்தை பார்க்கிறார். அதன் பிறகு மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் ரிஷபம், கன்னி, தனுசு ராசியை பார்வையிடுகிறார்.
ராகு/கேது:
வருடம் முழுவதும் மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.
மேன்மையான பலன் பெறும் ராசிகள்
மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் வருடம் பிறக்கும் போது சூரியன் தனது உச்ச வீடான மேஷத்தில் சஞ்சரிப்பார். ஆனால் இந்த குரோதி வருட புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் குருவும் மேஷ ராசியில் நிற்கிறார். இது போன்ற கிரக அமைப்பு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உருவாகும்.
கால புருஷ 5ம் அதிபதியும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியுமான சூரியனுடன் கால புருஷ 9-ம் அதிபதி பாக்கியாதிபதியுமான குரு சேருவதால் தர்மம் தலைத் தோங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்கள் புனரமைக்கப்படும். தொழில் முனைவோர் ஏற்றம் காண்பர்.
தங்கம் விலையேறும், பங்கு சந்தை ஏற்றம் பெறும், ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும்.செல்வச் செழிப்பை கூறும் கிரகம் சுக்ரன் உச்சம் பெறுகிறார். ஆடம்பரச் செலவு மற்றும் அழகு ஆடம்பர பொருட்கள், நகைகள், துணிமணிகள் மோகம் அதிகமாகும்.
ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் மேல்நாட்டு பாணியில் சோஷியலாக பழகுவார்கள். வயது படுபாடு இல்லாமல் காதல் திருமணம் அதிகம் நடக்கும். சினிமா, நாடக , நடனக் கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
பெண்களின் தனித் திறமை உலகில் போற்றப்படும். கிரடிட் கார்டு கலாச்சாரம், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமாகும்.
சனி+செவ்வாய் சேர்க்கை இருப்பதால் இயற்கை சீற்றம், அதிக மழை, விபத்துக்கள், போர் அபாயம், புதுவிதமான நோய், ஒற்றுமை குறைவு, அதீத வைத்தியச் செலவு, கடனால் அவதி, வழக்குகள் அதிகமாகும்.
- உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது.
- புதிய ஆண்டு தொடக்கத்தை உகாதி குறிக்கிறது.
இந்து மத நூல்கள் மற்றும் புராணங்களின் படி பிரம்மா இவ்வுலகை படைக்க தொடங்கிய நாளை உகாதி குறிக்கிறது. பிரம்மா காலத்தை வரையறுக்க வருடங்கள், வாரங்கள், நாட்கள் மற்றும் மாதங்களை உருவாக்கி பிரபஞ்ச செயல்பாட்டின் அடையாளமான உகாதியை தொடங்கியதாக நம்பப்படுகிறது. உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது. ஆதி என்றால் புதியது என்று பொருள்படும்.
12 ஆம் நூற்றாண்டில் இந்தியக் கணிதவியலாளர் பாஸ்கராச்சாரியார் யுகாதியை புத்தாண்டின் தொடக்கமாக கண்டறிந்தார். கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் அதாவது புதிய ஆண்டு தொடக்கத்தை யுகாதி குறிக்கிறது.
யுகாதி, தெலுங்கு பண்டிகையாகும். இது தெலுங்கு புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தடவி குளிப்பார்கள். இது உடலையும் மனதையும் தூய்மையாக்கி புத்தாண்டுக்கு தயார்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மக்கள் புதிய ஆடைகளை அணிவார்கள். இது புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது.
மக்கள் தங்கள் வீடுகளை மா இலைகள் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரிக்கின்றனர். இந்த நிகழ்விற்காக மக்கள் சிறப்பு உணவுகளை தயார் செய்வார்கள்.
யுகாதியின் சிறப்பு உணவுகள்
பேவு பெல்லா
யுகாதி அன்று, நடைமுறையில் ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப இலைகள், மாம்பழம், புளி, உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் ஆகியவற்றின் கலவையான பேவு பெல்லா தயாரிக்கப்படுகிறது.
பச்சடி
பச்சடி ஆறு சுவைகளையும் கொண்டுள்ளது. யுகாதி பண்டிகையின் போது மக்கள் தங்கள் குடும்பத்துடன் ருசிக்கும் உணவாக இது திகழ்கிறது.
- இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம்.
- மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
செவ்வாய் நீச்சமும், வக்ரமும்
* ஐப்பசி 6-ந் தேதி முதல் தை 4-ந் தேதி (23.10.2024 - 17.1.2025) வரை கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுகிறார்.
* கார்த்திகை 18-ந் தேதி முதல் மாசி 9-ந் தேதி வரை (3.12.2024 - 21.2.2025) செவ்வாய் வக்ர நிலையில் இருக்கிறார்.
* இடையில் தை 5-ந் தேதி (18.1.2025) அன்று மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், மீண்டும் பங்குனி 24-ந் தேதி (7.4.2025) அன்று கடகத்திற்கு திரும்பி வருகிறார்.
இதுபோன்ற காலங்களில் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, செவ்வாய் ராசிநாதனாக அமைந்த மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள், அங்காரக தலங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.
சனி, குரு வக்ர காலம்
* குரோதி வருடம் ஆனி மாதம் 5-ந் தேதி முதல் ஐப்பசி மாதம் 18-ந் தேதி (19.6.2024 - 4.11.2024) வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார்.
* குரோதி வருடம் புரட்டாசி மாதம் 29-ந் தேதி முதல் தை மாதம் 20-ந் தேதி (15.10.2024 - 11.2.2025) வரை, ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார்.
இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த தமிழ் வருடத்தின் பெயர் 'குரோதி'. வருகிற பங்குனி மாதம் 30-ந் தேதி (13.4.2024) சனிக்கிழமை அன்று, மிருகசீரிஷம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில், மிதுன ராசியில் இரவு 8.10 மணிக்கு மங்களகரமான குரோதி ஆண்டு பிறக்கிறது.
இந்த ஆண்டின் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இந்த ஆண்டு சுக்ரனின் வீடான ரிஷப ராசிக்குச் செல்லும் குரு, அங்கு ஓராண்டு காலம் இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்களும், இனிய சம்பவங்களும் நடைபெறவும், மக்களுக்கு ஆன்மிக சிந்தனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம். நீர்நிலைகள் வற்றும் சூழலும், நெருப்பால் ஆபத்தும், புதிய தொற்று நோய்கள் உருவெடுத்தலும் இருக்கும். அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு, மக்களுக்கு மன கலக்கத்தை ஏற்படுத்தும்.
புஞ்சைப் பயிர்களின் விளைச்சல் பெருகும். பவளம் மற்றும் சிவப்பு நிற ரத்தினங்களின் உற்பத்தி அதிகரிக்கும். தங்கம் விலை ஏற்றம் காணும். கால்நடைகள் விருத்தியாகும். எண்ணெய், மற்றும் திரவப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். தேவையான அளவு மழை பெய்து விவசாயத்தை காப்பாற்றும்.
அரசியல் களம் சூடுபிடிக்கும். மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும். பெட்ரோல், டீசல், எரிவாயு இறங்குவதுபோல் தோன்றி, மீண்டும் ஏறுமுகம் காணும். வெள்ளை நிற பொருட்களின் விலை உயரும். எப்படி இருந்தாலும் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கு அதிகரிக்கும். சுக்ரன் வீட்டில் குரு உலா வருவதால் நாடு முழுவதும் திடீர், திடீரென பதற்றம் அதிகரிக்கும். கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் மக்கள் மன அமைதி காணலாம். இளைஞர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய வருடம் இது. சனி - செவ்வாய் சேர்க்கை மற்றும் சனி -செவ்வாய் பார்வைக் காலங்களில், இயற்கை சீற்றங்களாலும், நூதன தொற்று நோய்களாலும் அச்சுறுத்தல் ஏற்படும். சித்திரை 18-ந் தேதி (1.5.2024) அன்று, குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. பகைக் கிரகமான சுக்ரன் வீட்டிற்கு குரு செல்வதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள்.
சனி - செவ்வாய் சேர்க்கை (14.4.2024 முதல் 21.4.2024 வரை), சனி- செவ்வாய் பார்வை (23.10.2024 முதல் 17.1.2025 வரை) காலங்களில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் கடக ராசிக்கு அஷ்டமச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு பாதச்சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச்சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடக்கிறது. இவர்கள் சுய ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில், தசாபுத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது வளர்ச்சியைத் தரும்.
- வசந்தோற்சவம் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். அதன்பின் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு வசந்த உற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.
22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர். வசந்தோற்சவம் முடிந்ததும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
கடைசி நாளான 23-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியுடன் வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்ததும், மாலை கோவிலை அடைகிறார்கள்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது.
சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க உற்சவர்களுக்கு வசந்த காலத்தில் நடத்தப்படும் உற்சவம் என்பதால், `வசந்தோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வசந்தோற்சவத்தில் உற்சவர்களுக்கு மணங்கமழும் மலர்களை சமர்ப்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் வசந்தோற்சவத்தில் நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஆர்ஜித சேவைகள் ரத்து
வசந்தோற்சவத்தை முன்னிட்டு 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டதள பாத பத்மாராதன சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா.
திருமலை:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று 8 மணியில் இருந்து 9 மணிவரை தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கற்பக மரத்தின் கீழே அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்தால் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல் பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி வழங்கவே உற்சவர் கோதண்டராமர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு உற்சவர்களான சீதாதேவி, லட்சுமணர், கோதண்டராமருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று யுகாதி பண்டிகை.
- திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தேரோட்டம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 27 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை இரவு 10.27 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: ரேவதி காலை 8.33 மணி வரை. பிறகு அசுவினி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று யுகாதி பண்டிகை. தெலுங்கு வருடப் பிறப்பு சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூத வாகனத்திலும், சப்பரத்திலும் திருவீதி உலா. கோவில்பட்டி ஸ்ரீசுவாமி சப்பரத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தேரோட்டம். வடபழனி, வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-சுபம்
கடகம்-வரவு
சிம்மம்-செலவு
கன்னி-தாமதம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-வெற்றி
தனுசு-களிப்பு
மகரம்- உண்மை
கும்பம்-பரிவு
மீனம்-அமைதி
- ரமலானின் பாக்கியமிக்க கடைசி இரவு.
- நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்
ரமலானில் பாக்கியமிக்க கடைசி இரவு
இஸ்லாமிய மாதங்கள் பெரும்பாலும் 30 'நாட்களில் நிறைவுபெறும். சில நேரங்களில் 29 நாட்களிலும் நிறைவடையும். அது ஆங்கில மாதங்களைப் போன்று 28 அல்லது 31 நாட்களிலோ நிறைவு பெறாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
இதே விதத்தில் தான் ரமலான் நோன்பை நோற்க வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்ததும் பெருநாள் பிறையான ஷவ்வால் மாத பிறையைக் காண வேண்டும். மேகமூட்டம் இருந்து பிறை தென்படாமல் போனாலும், மேகமூட்டமே இல்லாமல் பிறை தெரியவில்லை யென்றாலும் ரமலானை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்த அன்று பிறை தென்பட்டால், அன்றைய ரமலான் மாத நாட்கள் 29 நாட்களாக கணிக்கப்படும்.
ரமலானின் கடைசி இரவு என்பது 29-வது இரவாக இருக்கலாம். அல்லது அன்றைய ரமலான் மாதம் முப்பது நாட்களாக இருந்தால், முப்பதாம் பிறை ரமலானின் கடைசி இரவாக இருக்கலாம். ஷவ்வால் பிறையான பெருநாள் பிறைக்கு முன்பு வருவதுதான் ரமலானின் கடைசி பிறை. ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து வெகுமதிகள் வழங்கப்படுகிறது.
அந்த வெகுமதிகளை பெற்றிட நோன்பாளிகள் ரமலானின் கடைசி பிறை இரவு அன்று அதிகமாக இரவு வணக்கம் புரியவேண்டும். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். அன்றைய இரவிலும் சரி, ரமலானின் ஒவ்வொரு இரவிலும் சரி எல்லாம் வல்ல அல்லாஹ் நரக கைதிகளை விடுதலை செய்கின்றான். எனவே, ரமலானின் கடைசி இரவில் முடிந்த அளவுக்கு நரகத்திலிருந்து விடுதலை பெற இறைவனிடம் இருகரமேந்தி அதிகமாக இறைஞ்ச வேண்டும்.
'ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்தால், ஓர் அழைப்பாளர் இவ்வாறு அழைப்பு கொடுக்கிறார். 'நன்மையை தேடுபவனே! நன்மையின் பக்கம் முன்னேறிச் செல்! தீமையை தேடுபவனே! தீமையை குறைத்துக்கொள்! நரகத்தில் இருந்து கைதிகளை விடுதலை செய்ய இறைவனுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், இது ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நீடிக்கிறது என்கிறார். இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)
'ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்காக அவர்களின் பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறியபோது, 'அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா? என நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறில்லை. ஒரு வேலையாளுக்கு அவரின் ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதெல்லாம் அவர் தம் வேலையை முடித்து கொடுத்த பிறகு தான்' என நபி (ஸல்) விளக்கம் அளித்தார்கள். (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ் மது)
ரமலானின் கடைசி இரவு ஏன் பாக்கியம் நிறைந்ததாக அமைகிறது என்றால், அன்றைய இரவுதான் நரக விடுதலையின் கடைசி இரவாகும். அன்றைய இரவில் நரக கைதிகளுக்கு நரக விடுதலை கிடைக்கிறது. மேலும், அன்றைய இரவில் இறைவனின் கூலியாக பாவமன்னிப்பும் கிடைக்கிறது. இத்தகைய இரண்டு வாய்ப்புகளும் ரமலானின் கடைசி இரவில் வாய்ப்பதால் அந்த கடைசி இரவு பாக்கியம் நிறைந்ததாக ஆகி விடுகிறது. இந்த பாக்கியத்தை பாக்கியசாலிகள் தவிர வேறு எவரும் பெறமுடியாது.
- ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இன்று முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது.
மதுரை:
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது.
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது சித்திரை திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில் கள்ளழகர் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களின் சார்பிலும் தனித்தனியாக அச்சிடப்பட்ட பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது.
இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். 21-ந் தேதி மாலை 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும், 22-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 23-ந் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.
பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். இதனை தொடர்ந்து 24-ந் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 25-ந் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26-ந்தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 27-ந்தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும்.
- ராமேசுவரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது.
- திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும்.
ராமேசுவரம்:
தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சுவாமி வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இந்த கோவிலில் தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமா வாசை மற்றும் மாதந்திர அமாவாசை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று பங்குனி மாத சர்வ அமா வாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசு வரம் வருகை தந்தனர்.
தம்மோடு வாழ்த்து மறைந்து முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி திதி கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஏற்கனவே தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்தது. அசம்பாவி தங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலிலும் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
- 23-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
10-ந் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14-ந் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
21-ந் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 24-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏப்ரல் 25-ந் தேதி விடையாற்றியும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.






