என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    • 23-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    10-ந் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14-ந் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

    21-ந் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 24-ந் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏப்ரல் 25-ந் தேதி விடையாற்றியும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

    • முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான்.
    • முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம்.

    நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.

    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு.

    சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க பார்வதிதேவி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனைக் கொண்டு சூரனை வதைக்கச் சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்திவேல் என்ற பெயரும் உண்டு.

    முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

    "வெல்" என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்" என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும். பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.

    முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்" என்ற பெயரும் உண்டு.

    வேல் உணர்த்துவது என்னவென்றால்... வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது. வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

    முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.

    மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு 'ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க" என்று சொன்னால், மனம் லேசாகி விடும்.

    வேல் வழிபாட்டின் பலன்கள்:

    காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

    கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

    வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

    சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.

    சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.

    கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.

    வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும்.
    • நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும். விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஜாதக ரீதியாக நமக்கு யோக பலன் தரும் கிரகம் எது என்று அறிந்து, அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்கும் நாளில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடி வரும்.

    நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கை சக்கரம் சீராக சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்த கிரகம் பலமிழந்து இருக்கின்றதோ அந்த கிரகத்தை பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள். விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும்.

    பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    சூரியன் அருள்பெற விரும்புபவர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஆதிவார விரதம்' இருப்பது நல்லது. சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுங்கள். கோதுமை தானம் செய்வது நல்லது.

    சந்திர பலம் வேண்டுபவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற திங்கட்கிழமை அன்று விரதம் இருப்பது நல்லது. அன்றைய தினம் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானம் செய்யலாம்.

    செவ்வாய் என்னும் அங்காரகன் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டு துவரை தானம் செய்வது நல்லது.

    புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்விஞானம் பெற விரும்புபவர்கள், புதன்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது. பாசிப்பயிறு தானம் செய்வது நல்லது.

    'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள், வியாழக்கிழமை விரதம் இருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு, சுண்டல் தானம் கொடுப்பது நல்லது.

    சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக் கிழமை விரதம் இருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூ மாலை அணி வித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது. மொச்சை தானம் செய்யலாம்.

    சனி பகவானின் அருளைப்பெற விரும்புபவர்கள், சனிக்கிழமை அன்று விரதமிருந்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசை மாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும். எள்ளோதரை நைவேத்தியம் அல்லது எள் தானம் செய்யலாம்.

    ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

    கேது வின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது இருக்கும் இடத்திற்குரிய நாளில் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது. ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு தானம் செய்வது சிறந்தது.

    ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற நற்பலன் தரும் கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருப்பதால் குடும்ப முன்னேற்றமும், செல்வச்செழிப்பும், செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த விரதங்கள் உறுதுணையாக அமையும்.

    எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்குவது நல்லது. விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும்.

    • அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

    திருச்சி:

    பஞ்சபூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக் காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 17-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு தேரோட் டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கென இன்று அதிகாலை சாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

    முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 6.50 மணியளவில் ஜம்புகே ஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது.

    பின்னர் காலை 8.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்ப ட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 12.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தின் போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வாணவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • நோன்புப் பெருநாளின் தானிய அறம்.
    • பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸாவு வீதம் வழங்கிடவேண்டும்.

    நோன்புப் பெருநாளின் தானிய அறம்

    இஸ்லாத்தில் பொருளாதாரக் கடமையும் உண்டு. பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன்வைத்த யோசனைதான் 'ஸதகா' எனும் தர்மநிதி வழங்கலும், 'ஜகாத்' எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும். இதுபோக பல்வேறு தர்மநிதி வழங்கல் ஆலோசனைகளை வழங்குகிறது.

    'ஸதகா ஜாரியா' எனும் நிலையான தர்மம் வழங்கல் குறித்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. ஸதகா எனும் தர்மநிதி ஆண்டாண்டு காலம் செய்யப்படுவது. ஜகாத் எனும் கட்டாய ஏழை வரி ஆண்டுக்கொருமுறை செய்யப்படுவது.

    ஸதகா ஜாரியா எனும் நிலையான தர்மம் நீண்ட நெடிய காலத்திற்காக செய்யப்படுவது. இதுபோக, ஜகாதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் அன்று வழங்கப்படும் தானிய தர்மமும் உண்டு. இது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமை யாக்கப்பட்டது.

    'நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி). நூல்:புகாரி)

    சிறியவர் - பெரியவர், சுதந்திரமானவர் - ' அடிமை அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது தீட்டாத கோதுமையையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி (ஸல்) அவர்கள் கடமையாக் கினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக்கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தது. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரி (ரலி), நூல்: புகாரி)

    'நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.' (அறி விப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    'பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் இந்த தர்மத்தைக் கொடுத்து வந்தார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    இந்த தர்மத்தை இஸ்லாம் கடமையாக்கியதற்கு இரண்டு காரணங்களாகும்.

    1) ஒரு நோன்பாளி நோன்பு சமயத்தில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து அவரை இந்த தர்மம் தூய்மைப்படுத்துகிறது,

    2) அதை வாங்கி சாப்பிடுவதினால் ஏழைகளின் பசியும் பறந்து விடுகிறது.

    பசியில்லாத உலகை கட்டமைக்கவும், பசியில்லாத பெருநாளை அனைவரும் சமமாக கொண்டாடவும் இத்தகைய தர்ம சிந்தனையை இஸ்லாம் விதைக்கிறது. நோன்புப் பெருநாள் தொழுகையை இஸ்லாம் தாமதமாக வைத்ததே. பெருநாள் தர்மத்தை ஏழை களுக்கு வழங்கிட சிறிய அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்காகத்தான். நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸாவு வீதம் வழங்கிடவேண்டும்.

    ஒரு ஸாவு என்பது 2 சதவீதம் முதல் 2 1/2 கிலோ வரை அளவாகும். ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் உண்டோ அதற்கு தகுந்தாற் போல் கணக்கிட்டு ஏழைகளுக்கு பெருநாள் தொழுகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே வழங்கிட வேண்டும்.

    'தூய்மையாக வாழ்பவன் வெற்றிபெற்றான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (திருக்குர் ஆன் 87:14,15)

    • 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலையில் வலம் வருவது நல்லது.
    • மரத்தில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோம வாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரசமரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்கிறார்கள்.

    அமாவாசை நாளில் 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும். எனவேதான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரசமரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரசமரத்தை வழிபட்டு, மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

    • திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று.
    • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 26 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை நள்ளிரவு 12.36 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.06 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. அமா சோம பிரதட்சணம். ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று. பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் வெள்ளி விருஷப சேவை. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம் வழிபாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியமமன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-பிரீதி

    மிதுனம்-நட்பு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-அன்பு

    கன்னி-சுகம்

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- லாபம்

    மகரம்-உயர்வு

    கும்பம்-அமைதி

    மீனம்-புகழ்

    • விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
    • கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும். அதே போல இன்று வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

     இதற்காக பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் வரிசையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    • அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
    • சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திரு விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்த ருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகி றார்.

    இதைத்தொடர்ந்து திரு விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.

    அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ் வொரு வாகனத்தில் எழுந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வருகின்ற 15-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 16-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகி றது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர்.
    • சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார்.

    சித்திரை – திருவோணம் உச்சிக்காலம், ஆனி – உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி – வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி – திருவாதிரை உஷத்காலம், மாசி – வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.

     விக்கிரகமாக மாறிய சிவனடியார்!

    கும்பகோணம் அருகில் உள்ள ஊர் கோனேரிராஜபுரம். இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் நடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில், மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம்!

    சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரி ராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், '`கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்கவேண்டும்" என்று கட்டளையிட்டார் மன்னர். சிவ பக்தரான அந்தச் சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகப் பணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்துகொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது! சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.

    நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். `விக்கிரகம் இன்னும் தயாராக வில்லை!' என்பதை அறிந்து சினம் கொண்டவர், '`இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராக வில்லையெனில், உம் தலை தரையில் உருளும்!'' என்று கூறிவிட்டு, ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, `அம்பலவாணா… இது என்ன சோதனை!'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித் துக்கொண்டிருந்தது.

    அப்போது, `ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். `ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்…

    சுடுதண்ணீராக இருந்தால் நன்று!'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப்போகிறது;

    இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!' என்று சலித்துக்கொண்டவர், `உள்ளே, உலை கலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்!'' என்றபடி வெளியே அமர்ந்துவிட்டார்.

    சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணமே நடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! `என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்து, கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப்பணிந்தார்.

     ஒரு சிற்பியும் ஐந்து விக்கிரகங்களும்!

    பல்லவ வம்சத்தின் சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் இயற்றும் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அதற்காக சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார்.

    கடைசியாக சோழ தேசத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரைக் கண்டார். அவர் பெயர் நமசிவாயமுத்து. அவரும் சிறந்த சிவபக்தர். அவரிடம் நடராஜர் திருவுருவத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். மன்னரின் விருப்பப்படி நமசிவாய முத்து அதியற்புதமான தோற்றத்தில் நடராஜர் சிலையை வடிவமைத்தார். அந்த செப்புச் சிலையின் அழகில் மயங்கிய மன்னர், `செப்பில் செய்த விக்கிரகமே இவ்வளவு அழகாக இருந்தால், தங்கத்தில் வடித்தால் என் ஐயனின் திருவுருவம் இன்னும் எத்தனை பொலிவாக இருக்கும்!' என்று வியந்து, சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து சிலை வடிக்கச் சொன்னார்.

    சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார். சிலையை வடித்துவிட்டுப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே இருந்தது. சிற்பி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த மன்னர், சிற்பியை சிறையில் அடைத்துவிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய ஈசன், `சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்க சிலையை நானே செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாகவே இருக்க விரும்புகிறேன். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் தமிழகத்துக்கு செல்ல ஏற்பாடு செய்' என்று உத்தரவிட்டார்.

    சிற்பி இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டதுடன், முதலில் செய்த சிலையை சிற்பியிடன் கொடுத்து தென்பகுதிக்குச் செல்லும்படிக் கூறினார்.

     செப்பறையில் ஒலித்த சிலம்பொலி!

    முதலில் வடித்த நடராஜரின் செப்புச்சிலையுடன் தென் பகுதிக்குப் புறப்பட்ட சிற்பியின் பாதுகாவலுக்காக மன்னரின் படைவீரர்கள் சிலரும் உடன்சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது சிலையின் எடை அதிகரித்தது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும் படைவீரர்களிடம் சிலையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கும்படிக் கூறினார். சற்று நேரம் உறங்கிய வீரர்கள் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது சிலையை அங்கே காணவில்லை.

    அதனால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த சிற்பி, அந்த பகுதியை ஆண்டு வந்த மன்னர் ராம பாண்டியனிடம் முறையிட்டனர். தன்னுடைய நாட்டில் நடராஜர் சிலை காணாமல் போனதால் மனம் வருந்திய ராமபாண்டியன், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிச் சென்றார். வழியில் காட்டுக்குள் இருந்து சிலம்பு சத்தம் கேட்டது. சிலம்பொலி கேட்ட இடத்தை நோக்கி மன்னர் தன் படைவீரர்களுடன் சென்று பார்த்தார்.

    ஓரிடத்தில் எறும்புகள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். எறும்புகளைத் தொடர்ந்து சென்ற மன்னர், ஓரிடத்தில் செப்புச் சிலை இருப்பதைக் கண்டார். அப்போது, `மன்னனே, இதுவே எமக்கு உகந்த இடம்.

    இந்த இடத்தில் எனக்கு ஒரு கோயிலை எழுப்பி, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமபாண்டிய மன்னர் ஓர் ஆலயம் அமைத்து, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். சிற்பியால் செய்யப்பட்ட நடராஜரின் முதல் செப்புச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம்தான் செப்பறை.

     கட்டாரிமங்கலம்

    செப்பறையில் இருப்பதுபோலவே தான் தினமும் வழிபடும் நெல்லையப்பர் கோயிலிலும் நடராஜரின் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமபாண்டியன், அதே சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை வடிக்க விரும்பினார். அதே தருணத்தில் ராமபாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட வீரபாண்டியனும் தன்னுடைய ஆளுகையின் கீழுள்ள கட்டாரி மங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பினான். ராமபாண்டியன் அதே சிற்பியிடம் இரண்டு நடராஜர் சிலைகளை வடிக்கும்படிக் கூறினார்.

    சிற்பியும் இரண்டு செப்புச் சிலைகளை வடித்து முடித்தார். தன்னுடைய சிலையை வாங்கிப் போக வந்த வீரபாண்டியன் சிலைகளின் அழகில் மயங்கிவிட்டான். இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்லவேண்டுமென்று பேராசைப் பட்டான். அத்துடன் நிற்காமல், சிற்பி அதேபோல் அழகான நடராஜர் சிலைகளை வேறு யாருக்கும் செய்து கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கைகளைத் துண்டித்தான். பின்னர், அவனுடைய படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரண்டு நடராஜர் சிலைகளையும் எடுத் துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரி மங்கலம் சென்று, அங்கே ஒரு நடராஜரைப் பிரதிஷ்டை செய்தனர்.

     கரிசூழ்ந்தமங்கலம்

    இரண்டாவது படைப்பிரிவினர், வேறு வழியில் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தாமிரபரணி குறுக்கிட்டது. தாமிரபரணிக்கும் நடராஜப் பெருமானின் திருமேனியைத் தழுவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலும்; வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். படைவீரர்கள் அனைவரும் சிலையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிலநாள்களுக்குப் பிறகு தாமிரபரணியில் வெள்ளம் வடிந்ததும் நடராஜரின் செப்புச் சிலை கரையில் ஒதுங்கியது. அந்தப் பகுதி மக்கள் அந்த விக்கிரகத்தை ஓரிடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் செய்தியை கேள்விப்பட்ட ராம பாண்டியன், அந்த நடராஜரை நெல்லையப்பர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பி எடுத்துச் செல்ல வந்தார். ஆனால், அந்தச் சிலையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.

    அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய இறைவன், தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், தனக்கு அங்கே ஒரு கோயில் கட்டும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு நான்காவது நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஊர்தான், கரிசூழ்ந்தமங்கலம்.

    கன்னத்தில் கிள்ளிய சிற்பி!

    மன்னர் ராமபாண்டியர் கையை இழந்த சிற்பிக்கு மரத்தினாலான கையைப் பொருத்தினார். மரக்கை பொருத்தப்பட்டு, சிற்பி தன்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து மற்றொரு நடராஜர் சிலையை வடித்தார். சிலையை வடித்து முடித்ததும், தான் முன்பு வடித்த நான்கு சிலைகளைவிடவும் இந்த ஐந்தாவது நடராஜர் சிலை மிகவும் அழகாக இருப்பதைக் கண்ட சிற்பி, அந்தச் சிலையின் அழகில் மயங்கியவராக, அந்தத் திருமேனியின் கன்னத்தில் மெள்ள கிள்ளினார். அவர் கிள்ளிய வடு சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. அந்த சிலை கருவேலங்குளத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

     தில்லை நடராஜர்

    ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜ பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயி லில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர்.

    சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. கொடி மரத்தின் தென்புறம் உள்ள இது, நிருத்த சபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்கு மிடம் ஆயிரம் கால் மண்டபம். இது ராஜசபை.

     குடகத் தில்லை அம்பலவாணன்

    சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு தில்லையம்பலத்தானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, பட்டீஸ்வர நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் தரிசனம் தந்தார். இதன் காரணமாக இங்கிருக்கும் நடராஜருக்கு `குடகத் தில்லை அம்பலவாணன்' என்ற என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    பஞ்ச நதன நடராஜர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இத்தலத்தின் ஸ்ரீபஞ்ச நதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது.

     திருவெண்காடு நடராஜர்

    திருவெண்காடு தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான், ஈரேழு பதினான்கு புவனங் களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோத்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகளுடன் காட்சி தருகிறார்.

     திருநல்லம் நடராஜர்

    கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத் தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கினால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவிலிருந்து பார்த்தால் முதியவரைப் போலவும், அருகில் சென்று பார்த்தால் இளை ஞரைப் போலவும் இரண்டு திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.

     மயூரநாதர்

    பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இந்தத் தலத்தில் அம்பிகைக்காக ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால், இங்குள்ள நடராஜரை `மயூர தாண்டவர்' என்கிறார்கள். மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் இருக்கும் ஜுரஹர தேவரை தரிசித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

    மரகத நடராஜர்

    உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக்காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலதில்தான். `உத்திரம்' என்ற சொல்லுக்கு `உபதேசம்' என்ற பொருளும் உண்டு. `கோசம்' என்றால் `ரகசியம்'. அம்பாளுக்கு பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.

    • செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலம் வைத்தீஸ்வரர் கோயில்.
    • மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது.

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    இந்தியாவில் கிரக, விஞ்ஞானப் பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன. இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    சீதையை தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் என சிறப்பு பெயருடன் திகழலாயிற்று.

    மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த தலத்திற்கு மேலும் அதிகமாயிற்று. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லது அவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.

    வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய் தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

    ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.

    கோவில் வரலாறு:

    செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய்'' வந்ததாகவும் அதனை போக்க சிவபெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

    ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கிக் கொண்டு போகும் போது, ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் லட்சுமணன் உடலைக் கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர்.

     இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் `சடாயு குளம்' என்று அழைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அமிர்தம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் "சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்'' என்ற பெயர் பெற்றது.

     கோவிலின் சிறப்பம்சம்:

    இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அனைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார். மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.

    சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சிவனை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

    • காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை.
    • முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    காளி என்றதும் பொதுவாகவே நம் மக்களுக்கு அவளிடம் பக்தியையும் தாண்டி பயம் தான் ஏற்படும். ஆனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனைப் பார்த்தால் அந்த எண்ணமே மாறி விடும். தேனை தேடி பறந்து வரும் தேனீக்களாக ஒரு முறை அம்மனை தரிசித்து வந்தால் மீண்டும் மீண்டும் அத்தலம் செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறாள் அன்னை.

    இங்கு தான், கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அளிக்கும் வரப்பிரசாதியாய் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மதுரகாளி. காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை. பெயருக்கு ஏற்றார் போல் முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.

    மதுர காளியம்மன் திருக்கோயிலில், காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர், உடுக்கை ஒலிக்க அன்னையை உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். அதை நேரில் கேட்கும் போது நம்மையறியாமல் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணர முடியும். அப்படி அழைக்கும்போது மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    ஸ்தல வரலாறு

    ஆதியிலே சிறுவாச்சூரில் செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன்.

    மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களை காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான்.

    தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் அன்னை மதுர காளியம்மன்.

     செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை முதலில் மலை நோக்கி காட்டப்பட்டு, பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் என்ற திருநாமம் கொண்டாள் என்பதும் வழக்கு.

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

    இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக்காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது. திங்கள், வெள்ளிக்கிழமைகள் தவிர பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனை தரிசிக்கலாம்.

    ×