என் மலர்
வழிபாடு

முதலியாண்டான் திரு நட்சத்திரம் இன்று
- ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
- ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.
ராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் ராமானுஜரின் மருமகன் ஆவார். கிபி 1027 -ம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (ராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
இவருக்கு "ராமானுசன் பொன்னடி" என்றும் "எதிராச பாதுகா" என்றும் "ராமானுஜர் திரிதண்டம்" என்றும் "ஆண்டான்" என்றும் பல பெயர்கள் உண்டு. ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
ராமானுஜர் காஞ்சிபுரத்தில் இருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். ராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.
முதலியாண்டனின் குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார்.
இந்த விக்ரஹம் "தாம் உகந்த திருமேனி" என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்பு மிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.






