search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மாலத்தீவு அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
    X

    மாலத்தீவு அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    • அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீன ஆதரவாளரான முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மாலே:

    மாலத்தீவு அதிபராக முகமது முய்சு உள்ளார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    முகமது முய்சு கடந்த 2018-ம் ஆண்டு ஊழலில் ஈடுபட்டதாக, நிதி புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவு காவல்துறை தயாரித்ததாக கூறப்படும் அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி முறைகேடுகளில் 10 முக்கியமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அரசியல் ரீதியான நபர்களுடன் தொடர்பு, மோசடி, நிதி ஆதாரத்தை மறைக்க கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாலத்தீவில் வருகிற 21-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் மக்கள் தேசிய முன்னணி வலியுறுத்தி உள்ளன.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அதிபர் முகமது முய்சு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

    கடந்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன. நான் தவறு செய்திருந்தால் அப்போதே வெளியாகி இருக்கும். என் மீது எந்த தவறையும் அவர்களால் கூற முடியாது. முன்பு மேயர் மற்றும் அதிபர் தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டை கிளப்பினர். இதை எவ்வளவு காலத்திற்கு பேசினாலும், என் மீது பழி சுமத்த உங்களால் முடியாது என்றார்.

    சீன ஆதரவாளரான முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×