என் மலர்
சீனா
- ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை
- கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
இதற்கிடையே கனடாவும் அமெரிக்க பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தது. தொடர்ந்து கனடா, மெக்சிகோ தலைவர்களுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கான வரிவிதிப்பு உத்தரவை அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை. எனவே தற்போது அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு உள்ளிட்டவற்றிக்கு 15 சதவீத வரியும், விவசாய உபகரணங்கள், கச்சா எண்ணெய் மீது கூடுதலாக 10 சதவீத வரியும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் வழக்கு தொடரப்படும் என சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்கள் கடற்கன்னியை பார்த்து கையசைத்தனர்.
- கடற்கன்னியை மீன் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஒரு வன பூங்காவில் பொது மக்களை மகிழ்விப்பதற்காக கடற்கன்னி பொருட்காட்சியும் இடம்பெற்றிருந்தது. பூங்காவுக்கு திரண்டு வரும் பொது மக்கள் கடற்கன்னியை பார்த்து மகிழ்ந்து சென்றனர். இதற்காக பூங்காவில் ரஷிய கலைஞரான மாஷா என்ற 22 வயது இளம்பெண் பிகினி டாப் மற்றும் தேவதை போல வால் அணிந்து மீன் தொட்டிக்குள் அழகாக சறுக்கி கொண்டிருந்தார்.
கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்கள் கடற்கன்னியை பார்த்து கையசைத்தனர். மேலும் தொட்டிக்குள் இருந்த ராட்சத மீன்கள் கடற்கன்னியை சுற்றியே நீந்தி சென்றன. இந்நிலையில் மீன் தொட்டிக்குள் சுற்றிய ராட்சத மீன் ஒன்று கடற்கன்னியின் அருகே வந்த போது அவரை திடீரென்று தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாஷா மீன் தொட்டிக்குள் இருந்து மேலே ஏறினார்.
ராட்சத மீன் கடித்ததில் அவருக்கு தலை, கழுத்து மற்றும் கண் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டன. இந்நிலையில் பூங்காவில் கடற்கன்னியை ரசித்து கொண்டிருந்த பொது மக்கள் அவரை ராட்சத மீன் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து மாஷாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடற்கன்னியை மீன் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் கூறினர்.
- புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ஒருவர், புலியின் சிறுநீரகத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இதை பயன்படுத்தினால் முடக்கு வாத நோயை குணப்படுத்த முடியும் என்று கூறி 250 கிராம் சிறுநீர் பாட்டிலின் விலை சுமார் 50 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.596)-க்கு விற்கப்படுவதாக சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து குடித்தால் அல்லது வலி இருக்கும் இடத்தில் தடவினால் வலி குணமாகும். ஆனால், இதை எடுக்கும் போது உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்காக புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் கூறினர். இவ்வாறு விற்பனை செய்ய அவர்களிடம் வணிக உரிமம் மற்றும் செயல்பட அனுமதி இருப்பதால் அதை விற்க அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்தியாவில் பசுவின் கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதால் அதனை குடித்தால் நோய்கள் குணமாகும் என்று ஐஐடி இயக்குனர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு சிலர் ஆதரவுக் குரல் எழுப்பி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
- ஊழியர்கள் தங்களால் எண்ணக்கூடிய அனைத்து பணத்தையும் 15 நிமிடங்களுக்குள் வைத்திருந்தனர்.
சீன நிறுவனமான ஹெனான் மைன் கிரேன் தனது தொழிலாளர்களுக்கு 270 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்க போனஸை வழங்கியுள்ளது.
சீனாவில் 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை மேசையில் வைத்தது.
இந்த ஆண்டு இறுதியில் வழக்கமான போனசுக்குப் பதிலாக, சீன நிறுவனம் ஒரு தனித்துவமான நிகழ்வை ஏற்பாடு செய்தது. அங்கு பெரிய மேஜையில் மிகப்பெரிய அளவில் ரூ.70 கோடி வைக்கப்பட்டது.
நிறுவனம் 60-70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் பணத்தை அடுக்கி வைத்து, ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
பிறகு, ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமா அவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஊழியர்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது.
போட்டி வேகமாக இருந்தது, ஒவ்வொரு ஊழியரும் விரைவாக பணத்தைப் பிடுங்கி எண்ணத் தொடங்கினர்.
ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ண எடுத்தார். அவர்கள் எடுத்த பணத்தை அவர்களுக்கே வழங்கப்பட்டது. இதன் வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.
- சீனாவில் 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன் விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது.
- உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் மாணவர்களின் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன்விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது. இதனால் உடல் பருமன் சீனாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு உடல் பருமன் பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உடல் பருமன்பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
சீன மொழி ஆசிரியர், கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் மரியாதையை தரவேண்டும் என்றும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை பள்ளிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று டிரம்ப் கூறியுள்ளார்
- டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.
இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
- காவல்துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
- உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் ஒரு நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புசாய் என்ற பெயர் கொண்ட இந்த நாய்க்குட்டி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி பிறந்தது. தனது அழகான சிரிப்பு மற்றும் கண்டறியும் திறமை மூலம் சமூக வலைதளங்களில் வைரலான இந்த நாய்க்குட்டி சீனா காவல் துறையில் சேர்க்கப்பட்டதும் இதை சாங்கிள் கவுன்டி பொதுபாதுகாப்பு பணியகத்தை சேர்ந்த பயிற்சியாளரான ஜாவோ கிங்ஸ்சுவாய் நன்கொடையாக வழங்கி இருந்தார்.
பிறந்து 4 மாதத்தில் போலீஸ் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நாய்க்குட்டிக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பணியின் போது தூங்கியதற்காக இந்த நாய்க்கு வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதமாக, அந்த நாய்க்கு வழங்கப்படும் தின்பண்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.
- தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார்.
- அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.
சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் விசித்திரமான சிக்கலை சந்தித்துள்ளார்.
சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி நகரில் வசிக்கும் முதியவர் ஹுவாங் பிங். இவரது 2மாடி வீடு இருக்கும் பகுதியில் அரசு நெடுஞ்சாலை அமைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் அரசு கொடுத்த நஷ்டஈடு தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து காலி செய்தனர்.
ஆனால் முதியவர் ஹுவாங் பிங் தனது வீட்டை விற்க ஒரேயடியாக மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ரூ.2 கோடி வரை நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் பேசிப்பார்த்துள்ளனர். ஆனால் முதியவரை என்ன சொல்லியும் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் அதன்பின்தான் முதியவருக்கு சிக்கல் ஆரம்பித்துள்ளது. அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.

இதனால் முதியவர் தனது பிடிவாதத்தின் விளைவை நினைத்து வருந்தி வருகிறார். அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது.
முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால் அது இப்போது அது முடியாது என்று அவர் புலம்பி வருகிறார்.
- கார் மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடியது.
- விரைந்த போலீசார் வெய்கியுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பீஜிங்:
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் பென் வெய்கியு (வயது 62). இவர் கடந்த நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே காரில் சென்றார். அந்த நேரத்தில் மைதானம் அருகே ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் வெய்கியுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை கோர்ட்டு தற்போது நிறைவேற்றி உள்ளது.
- பாகிஸ்தான் நாட்டில் தயாரான செயற்கைக்கோள்.
- விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
PRSC-EO-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்தில் இருந்து செலுத்தப்பட்டு, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.
- மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.
- ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான்.
சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது.
பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், குடும்பத்தில் குறையும் மதிப்பு உள்ளிட்டவை குறித்து பயப்படுபவர்கள் இந்த யுக்தியை கண்டறிந்துள்ளனர்.
அதிகரித்து வரும் வேலையின்மைக்கு மத்தியில் வேலை செய்வதுபோல் நடிக்கும் இந்த முறையை பலர் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 யுவான் [சுமார் 350 ரூபாய்] தினசரி வாடகைக்கு இதற்கென்றே அலுவலகம் போன்ற அறைகள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் 30 யுவான் கட்டி, காலை முதல் மாலை வரை இங்கு இருந்துவிட்டு, வேலைக்கு சென்று வந்ததுபோல் பலர் பாவலா செய்து வருகின்றனர்.
வடக்கு சீனாவின் ஹெப்பி [Hebei] மாகாணத்தில் இதுபோன்ற ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.29.9 யுவான் கட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருக்கலாம். மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.
மற்றொரு வைரல் பதிவில், குடும்பத்தினருக்கு அனுப்ப, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான் வசூலிக்கப்படுவதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அங்குள்ள ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.
இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
மக்கள் கடும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது எனவும், 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.






