என் மலர்
உலகம்
- ஒன்றரை மாத போருக்குப்பின் 4 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
- பின்னர் மேலும் இரண்டு நாள் அதன்பின் ஒருநாள் என மொத்தம் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட உலக நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது. அதோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாகத்தான் ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்திருந்த சுமார் 90 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 270 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதுடன், மீண்டும் காசா மீது தாக்குதல் தொடங்கியது.
தற்போது ஹமாஸ் பிடியில் 135 பிணைக்கைதிகள் இருப்பதாகவும், இவர்களில் 115 பேர் உயிருடன் இருக்கலாம் எனவும் இஸ்ரேல் பிரதம மந்திரி அலுவலகம் நம்புகிறது.
இதற்கு முன்னதாக கத்தாரின் தோகாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே இடத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் இஸ்ரேல் சார்பில் மொசாட் தலைவர் டேவிட் பார்னியா கலந்து கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் அவரது பயணத்தை ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தலைமையலான இஸ்ரேல் போர் கேபினட், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் நாட்டின் உயர் அதிகாரி செல்லக்கூடாது என முடிவு எடுத்து, டேவிட் பார்னியாவின் பயணத்தை ரத்து செய்துள்ளது.
- உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
- எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என்றார் அதிபர் புதின்.
மாஸ்கோ:
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது.
எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.
அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெவ்வேறு காலகட்டத்தை நினைவுகூரும் விதமாக எராஸ் டூர் நடத்தி வருகிறார்
- "2023 ஆண்டிற்கான நபர்" என டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, 34 வயதான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift).
தனது 14 வயதிலிருந்தே பாடல்கள் எழுத தொடங்கிய டேலர் பல ஆல்பங்களை வெளியிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.
டேலர், 2024 டிசம்பர் வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஒரு நீண்ட இசை சுற்றுலாவை 2023 மார்ச் மாதம் துவங்கினார்.
எராஸ் டூர் (Eras Tour) என பெயரிட்டுள்ள இந்த சுற்று பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஸ்விஃப்டீஸ் (swifties) என அழைக்கப்படும் அவரது தீவிர ரசிகர்கள் அவர் செல்லும் நாடுகளுக்கெல்லாம் இடைவிடாது சென்று நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.
ஓவ்வொரு இசை நிகழ்ச்சியையும் சுமார் 72 ஆயிரம் பேர் பார்க்க வருகின்றனர். கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரத்திற்கும் ($238) மேல் நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தயங்காமல் காண வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரூ.141 கோடிகளுக்கும் (17$ மில்லியன்) மேல் வசூல் குவிகிறது.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும் பீஜ் புக் (Beige Book) எனப்படும் "சமகால பொருளாதார சூழல்" குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஓட்டல் அறைகளின் முன்பதிவு எராஸ் டூர் நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற "டைம்" (Time) பத்திரிகை, "2023 ஆண்டிற்கான நபர்" என டேலரை தேர்வு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.
டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.
இந்நிலையில் அவரது "எராஸ் டூர்" இசை நிகழ்ச்சி ரூ.8333 கோடிக்கு ($1 பில்லியன்) மேல் வசூல் செய்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அவரது சுற்று பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.
இச்செய்தியால் டேலரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
- நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள்மீது அடுத்தடுத்து மோதியது.
- தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு சம்பவ இடம் வந்து தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
கராகஸ்:
வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சுமார் 17 வாகனங்கள் மீது மோதியதில் அந்த வாகனங்கள் சேதமடைந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு சம்பவ இடம் சென்று தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
- ஜோ பைடன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை குடியரசு கட்சியினர் முன்வைத்தனர்
- விசாரணைக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்
அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார்.
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.
விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.
அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.
- ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட ஐ.நா. சபையில் தீர்மானம்.
- உதவி செய்து வந்தாலும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இரண்டு மாதங்களை கடந்து 3-வது மாதமாக நடைபெற்று வருகிறது.
வடக்கு காசாவை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போது பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், பிணைக்கைதிகள் முழுமையாக மீட்கப்படாமல் உள்ளனர்.
இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. சபையில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் ஆதரவோடு அல்லது ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், "தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பரிசு (gift) போன்று அமைந்துவிடும். திரும்ப வந்து இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் கொடுக்க அனுமதித்துவிடும்" என்றார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்திக்கிறார். இதற்கிடையே, போருக்குப்பின் கையாளப்படும் காசாவை கையாளப்படும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- கனடா குடிமக்களுக்கு இந்தியா சில மாதங்கள் விசாவை நிறுத்தி வைத்தது
- தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் என கனடா மக்கள் அஞ்சியதாக ட்ரூடோ கூறினார்
இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).
கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:
இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்.
இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.
- சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- லடாக்கை மறுசீரமைப்பு செய்து யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து சட்டம் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதி ஒப்பதல் வழங்கினார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது. மேலும், சட்டப்பிரிவு 370 தற்காலிகம்தான் எனத்தெரிவித்தது.
இதற்கு ஆதரவு ஒருபக்கமும், எதிர்ப்பு ஒரு பக்கமும் இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாக அவருடைய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான் கான் "சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோத இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல தசாப்தங்களாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம்.
- 18 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலை.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷிய ராணுவப்படையை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்," என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.
- சுரங்கங்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது.
- பிணைக்கைதிகளையும் சுரங்கங்களில் அடைத்து வைத்திருக்கலாம் என நம்புகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது எனக்கூறி இஸ்ரேல் ராணுவம் காசா மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசா அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைத்துள்ளது.
என்றபோதிலும் வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியற்றுடன் சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. அதற்கு ஏற்ப பல்வேறு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை வைத்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருக்கலாம். ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
- மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
கொழும்பு:
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.
- உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
- நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.
பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.
அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.
இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.






