என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆணுறை பயன்படுத்துவது குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    உலக சுகாதார மையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டு காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்தக் கருத்துக் கணிப்பில் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.

    மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    இந்த ஆய்வைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி சதி செய்ததாக டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.

    அதில் மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    • ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறலாம் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    • பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா பகுதியில் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறலாம் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

    போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    • சரக்குகளை கையாளும் முக்கிய போக்குவரத்து பாதையாக செங்கடல் உள்ளது.
    • 10 லட்சம் பேரல்களுடன் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்களை ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கடந்த 21-ந்தேதி சௌனியான் என்ற சரக்கு கப்பல் மீது சிறிய வகை ஆயுதம் மற்றும் டிரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் லேசான காயம் அடைந்தது.

    இதற்கிடையே கப்பலில் இருந்த ஊழியர்களை பிரான்ஸ் படைகள் காப்பாற்றியது. இதனால் கப்பல் கைவிடப்பட்டது. செங்கடலில் தனியாக நின்ற கப்பலில் ஹமாஸ் அமைப்பினர் இறங்கு துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தினர். மேலும் கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கும் டேங்கர்களை குண்டு வைத்து தாக்கினர். சுமார் ஆறு இடங்களில் குண்டு வைத்து தகர்த்தனர். இது தொடர்பான வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

    அந்த கப்பலில் ஒரு மில்லியன் (10 லட்சம்) கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கிறது. இந்த எண்ணெய் உடன் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கடலில் கச்சா எண்ணெய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    செங்கடல் வழியாக ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. முக்கியமாக ஐரோப்பிய உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்வதற்கு இந்த வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான்.
    • ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.

    அமெரிக்காவின் ஓகிஹோ மாகாணம் கிளீவ்லேண்ட் நகரை சேர்ந்தவன் ஜான் ஹென்றி. இதய கோளாறுடன் பிறந்த அவனுக்கு 5 மாத குழந்தையாக இருந்தபோது தற்காலிக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய மாற்று சிகிச்சையே நிரந்தர தீர்வு என டாக்டர்கள் கூறினர்.

    உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான். இன்றோ, நாளையோ என இதய தானத்திற்காக ஜான் ஹென்றி காத்திருந்தநிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஜான் ஹென்றிக்கு பொருத்துவதற்கான தகுந்த இதயம் கிடைத்தது.

    இந்த தகவல், அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் உற்சாகத்தை அளித்தது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.

    மருத்துவ உபகரணத்துடன் 'நான் புதிய இதயத்தை பெறுகிறேன்' என கூறியப்படி அவன் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினான். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.

    • அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்கலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
    • அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

    லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    "ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்கலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்."

    "ஆனால் இந்த மோதல் தீவிரமானால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம். அந்த சமயத்தில் அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது."

    "நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம். இதனால் லெபனானில் உள்ள பிரிட்டன் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே என் எளிமையான தகவல்," என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி தெரிவித்தார். 

    • அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

    பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் தெரிவித்துள்ளார்.

    "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை டில நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன. எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ஒலிம்பிக்கின் ஹாக்கியில் பாகிஸ்தான் அணி 3 முறை தங்கம் வென்றுள்ளது.
    • தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அணியின் தேசிய விளையாட்டாக ஹாக்கி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, ஆசிய சாம்பியன் கோப்பை அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட கடனில் வாங்கிய டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்டி கூறுகையில், இந்த தேசிய விளையாட்டிற்கு உரிய அந்தஸ்தும் மரியாதையும் ஹாக்கிக்கு வழங்கப்படவில்லை. இப்போது தேசிய விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ந்து வரும் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில், நாட்டின் ஹாக்கி திட்டத்தை புதுப்பிக்க சிறப்பு மானியம் வழங்கவேண்டும் என பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தி உள்ளார்.

    • கடந்த 24-ந்தேதி பிரான்சில் கைது செய்தனர்.
    • பாவெல் துரோவிற்கு நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது.

    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவை கடந்த 24-ந்தேதி பிரான்சில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    5 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.46 கோடி) பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும் அவர் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும். பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 2 முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம்.
    • ஸ்லீப் அப்னியா நோயில் இருந்து விடுபட படுக்கைக்கு செல்லும் முன்பாக மது அருந்தக்கூடாது.

    துபாய்:

    மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மருத்துவத்துறையில் ஸ்லீப் அப்னியா என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரியாக தூங்க முடியாமல் போகிறது.

    சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்கு சரியான சிக்னல்கள் செல்லாவிட்டாலும் ஸ்லீப் அப்னியா ஏற்படும். இந்த நோயால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு சரி செய்யாவிட்டால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் வரும்.

    இந்த நோயின் கொடுமை என்னவென்றால் இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே தெரியாமல் இருப்பதுதான். இதில் வெளியில் தெரியக்கூடிய அறிகுறிகளை கூட பெரும்பாலானோர் பெரிதாக கருதுவது இல்லை. ஸ்லீப் அப்னியா உள்ளவர்களுக்கு அதிகமான பகல் நேர தூக்கம் உண்டாகும். அதற்கு அடுத்த படியாக சத்தமான குறட்டையுடன் அயர்ந்து தூங்குவது ஆகும். மூச்சுத்திணறல், காலையில் தலைவலி அல்லது எரிச்சலான மனநிலை, வேலையில் கவனக்குறைபாடு, வாய் வறட்சி, இரவு முழுவதும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உயிரை பறிக்கும் அளவுக்கு செல்லலாம். இதனை கண்டறிய பாதிக்கப்பட்ட நபர் தூங்கும்போது நடத்தும் சோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. இந்த நோய்க்கு சிபிஏபி என்ற தானியங்கி எந்திரத்தை பயன்படுத்தி தூக்கத்தின்போது மூக்கில் ஏற்படும் காற்றழுத்தத்தை சீராக வைத்து சுவாசப்பாதையில் மூச்சடைப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த ஸ்லீப் அப்னியா நோயில் இருந்து விடுபட படுக்கைக்கு செல்லும் முன்பாக மது அருந்தக்கூடாது. உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். புகைப்பிடித்தல் கூடவே கூடாது. துபாயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் பாலின வேறுபாடின்றி துபாயில் வசிக்கும் 21 சதவீதத்தினரில் 51 வயது முதல் 60 வயதுடையவர்கள் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    குறட்டை சத்தம் தாங்க முடியாமல் தங்கள் துணைகளை அழைத்து வருவோர் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் துணைவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம், மன இறுக்கம், ஸ்லீப் அப்னியா ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

     

    அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். 

    • சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது.
    • தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41). திருமணமான இவர் கர்ப்பம் ஆனார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

    பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் ஆனார். குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் அடைந்தது குறித்து டாக்டர்களிடம் ஆலோசித்தபோது இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளனர்.

    சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது. ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. 2 மாதங்கள் குறைபிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்தன.

    இந்தநிலையில் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2-வது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8-வது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எனவே 10 மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றதால் அவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.

    ×