என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
    • போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன.

    போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் படுகாயமடைந்தனர்.

    • உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.
    • அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.

    சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.

    திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது. 

    • இந்தியாவுக்குள் ஊடுருவியது விடுதலை கோரும் முஜாகிதீன்கள் தான் என்று பாகிஸ்தான் கூறி வந்தது
    • ராணுவ ஜெனரல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லாக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 200 கிமீ வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 25 வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    ஆனால் இந்தியாவுக்குள் ஊடுருவியது விடுதலை கோரும் முஜாகிதீன்கள் தான் என்றும் தங்களது ராணுவத்துக்கும் அந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடர்பை முதல் முறையாக பாகிஸ்தான் வெளிப்படையாக பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளது.

    பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனிர் [Asim Munir], 1965, 1971 மற்றும் கார்கிலில் 1999 என பல சமயத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பாகிஸ்தானுக்காகவும், இஸ்லாத்துக்காகவும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கார்கில் போரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றது உறுதியாகி உள்ள நிலையில் ராணுவ ஜெனரல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • மூன்று விசைப்படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.
    • காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. மீனவர்கள் கைது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் ஏராளமான கடிதங்கள் எழுதிய போதிலும், மத்திய அரசு சார்பில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையை அடுத்த ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

    அவர்கள் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது.
    • அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பெண் குண்டு பாய்ந்து இறந்தார்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

    அப்போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா்.

    சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றவர். சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

    இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு.

    அமெரிக்க குடிமகன் ஒருவரின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைக் கேட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    இதேபோல் துருக்கி அரசும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாளாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினர்.

    • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.
    • நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது.

    இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் கமலா ஹாரிசின் பிரசார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது. கமலா ஹாரிசுக்கு 361 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி குவிந்துள்ளது.

    டிரம்புக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கிடைத்துள்ளது. கமலா ஹாரிசுக்கு கிடைத்த தொகை, இந்த அமெரிக்க தேர்தலில் ஒரு மாதத்தில் ஒரு கட்சிக்கு கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.

    தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் கடந்த ஜூலை 21-ந்தேதி அறிவித்தார்.

    அதன்பின் கமலா ஹாரிஸ் தேர்தல் களத்தில் குதித்தார். அன்றில் இருந்து கமலா ஹாரிசின் பிரசார குழு 615 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

    இதுகுறித்து கமலா ஹாரிஸ் பிரசார மேலாளர் ஜூலி சாவேஸ் ரோட்ரிக்ஸ் கூறும்போது, குறுகிய காலத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளார். இது தேர்தலில் நெருங்கிய வெற்றி தரும் என்றார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிதி ஆதாயம் ஹாரிசுக்கு சாதகமாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.



    இதற்கிடையே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி டிரம்புக்கு தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, அதிபர் தேர்தல் முடியும் வரை, டிரம்ப் மீதான தண்டனை அறிவிப்பதை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.

    • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றனர்.
    • ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறுகளால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் விண்வெளியில் சிக்கி உள்ளனர்.

    இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என அமெரிக்க விண்வெளி கழகமான நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளியில் இருந்து இந்திய நேரப்படி நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டது.

    இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை 9.30 மணிக்கு நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கியது.

    பூமியை நெருங்கியபோது விண்கலத்தில் இருந்து பாராசூட் விரிவடைந்தது. அதன்பின் விண்கலம் மெதுவாக தரையில் இறங்கியது.

    சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் விண்கலம் திரும்பி உள்ளது. விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர்.
    • வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது பிரபல யூடியூபரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. 'ஸ்பீடு' என்று அறியப்படும் பிரபல அமெரிக்க யூடியூபர் (அவரது உண்மையான பெயர் டாரன் ஜாசன்), சமீபத்தில் 1 லட்சம் டாலருக்கு (ரூ.84 லட்சம்) ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கினார். அதை நேரடியாக ஆன்லைன் வீடியோவில் பரிசோதித்துப் பார்த்தார்.

    முதலில் ரோபோ நாய்க்கு அவர் கைகொடுக்கிறார், நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடிக்கிறார். நாயும் துள்ளிக்குதித்தது.

    பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டு உள்ள துப்பாக்கி பொத்தானை ஆன் செய்துவிட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்து சுடத் தொடங்கியது. துப்பாக்கியில் இருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி யூடியூபரை தாக்கியது.

    இதை எதிர்பாராத அவர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்தார். அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தது. ஒருவழியாக அதன் பார்வையில் இருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோநாய் சுடுவதை நிறுத்தியது.

    அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார். நேரலையாக வெளியான இந்த வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர். வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.


    • கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று இந்தோனேசியா சென்றார்
    • ஜகார்த்தாவில் உள்ள இஸ்திக்லால் மசூதியை போப் பிரான்சிஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

    ஜகார்த்தா:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாகப் போப் பிரான்சிஸ் நேற்று இந்தோனேசியா சென்றிருந்தார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்கு போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக கருதப்படுகிறது.

    இந்தோனேசியா சென்றடைந்த போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகை சென்ற போப் பிரான்சிஸ், அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது போப் பிரான்சிஸ் மற்றும் இஸ்திக்லால் மசூதியின் இமாம் நசருதீன் உமர் இருவரும், மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தனர்

    முன்னதாக, போப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின்பேரில் 7 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் போப் ஆண்டவர் பயணத்தை சீர்குலைக்கவும், அவர்மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டது தெரிய வந்தது.

    • பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
    • ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது.

    மும்பை:

    மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கிக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு பத்திரமாக தரைறக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில், "பிராங்பேர்ட் நகருக்கு சென்ற விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

    • நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப் உரையாற்றினார்
    • இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு அளிக்க உள்ள பதிவை குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும், புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 ஏ மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும். 2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.

    எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க அவரும் [எலான் மஸ்க்கும்] ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

    முன்னதாக 2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நைரோபி:

    கென்யா நாட்டில் உள்ள நெய்ரி மாகாணத்தில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர் விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×