search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர்
    X
    4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர்

    பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க மிரட்டல் - 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர்

    அமெரிக்காவில் உள்ள யூதர் வழிபாட்டு ஆலயத்தில் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர் பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    டெக்சாஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கோலிவில்லே பகுதியில் யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேல் சபை உள்ளது. நேற்று சிலர் இங்கு வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வழிபாட்டு ஆலயத்துக்குள் ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் திடீரென்று புகுந்தார்.

    இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் அந்த மர்ம நபர் வழிபாட்டு ஆலயத்தில் இருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    யூதர்களின் வழிபாட்டு ஆலயத்தின் வெளிப்புற பகுதிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டது.மர்ம நபரிடம் சிக்கியுள்ள பணயக் கைதிகளை மீட்க போலீசார் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    இதற்கிடையே வழிபாட்டு ஆலயத்துக்குள் 4 பேரை பிடித்து வைத்துள்ள அந்த மர்ம நபர் பேஸ்புக்கில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நீங்கள் எனது தங்கையுடன் போனில் தொடர்பு கொள்ளுங்கள். நான் சாகப்போகிறேன். அமெரிக்காவுடன் பிரச்சினை இருக்கிறது என்று அவர் சத்தமாக கத்துவது பதிவாகி இருந்தது.

    மர்ம நபர் குறிப்பிட்ட சகோதரி யார்? என்ற தகவல் வெளியானது. அது பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியான ஆபியா சித்திக் என்று ஊடகங்கள் தெரிவித்தன. அவரை லேடி கொய்தா என்று அமெரிக்கா அழைக்கிறது.

    நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் கோர்ட்டு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    தற்போது அவர் டெக்சாசின் போர்டுவொர்த்தில் உள்ள பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்து 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    அந்த மர்ம நபர் ஆபியா சித்திக்கின் சகோதரியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டது. ஆனால் அவரது சகோதரர் ஹூஸ்டனில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அந்த மர்ம நபர் யார்? என்று இன்னும் தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விளக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென்சாகி தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் கூறும்போது, ‘பணயக் கைதிகள் நிலைமையை இஸ்ரேல் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் 8 மணி நேரத்துக்கு பிறகு பணயக் கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் விரைவில் குடும்பத்துடன் சேர்க்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    அதன்பின் மற்ற 3 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரும் காயம் இன்றி விடுவிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் அபாட் உறுதிப்படுத்தினார். 4 பேரை பிடித்து வைத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    Next Story
    ×