search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்
    X
    மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்

    வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை- துணை அதிபர் உத்தரவு

    பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்து அமீரக துணை அதிபர் உத்தரவு பிறப்பித்தார்.
    அபுதாபி:

    அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிறப்பு தகுதி கொண்டவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் அமீரக குடியுரிமை பெறும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது பங்களிப்பை செலுத்த உதவியாக இருக்கும். அவர்கள் அமீரக குடியுரிமை பெறுவதோடு மட்டுமல்லாமல் தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாட்டின் குடியுரிமையையும் வைத்துக் கொள்ளலாம்.

    அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலின் பேரில் அமீரக அமைச்சரவை இந்த விதிமுறைகள் மாற்றத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இத்தகைய தகுதி கொண்டவர்களை அமீரக குடியுரிமை பெறுவதற்கு அமீரக அமைச்சரவை, ஆட்சியாளர் அலுவலகம் மற்றும் நிர்வாக கவுன்சில் உள்ளிட்டவை பரிந்துரை செய்ய முடியும். ஒவ்வொரு பிரிவினருக்கும் குடியுரிமை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டைச் சேர்ந்த தகுதியுடையோருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் அவர்களது அனுபவங்கள் அமீரகத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இந்த புதிய விதிமுறையின் மூலம் அமீரக குடியுரிமை பெற முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அவர்களது பெயரில் அமீரகத்தில் சொத்துகள் இருக்க வேண்டும். டாக்டர்கள் தாங்கள் எந்த துறையில் அனுபவம் பெற்றுள்ளனர் என்பதுடன், குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதுடன், தங்களது தொழில் தொடர்பான அமைப்பு ஒன்றில் உறுப்பினராக பதவி வகிக்க வேண்டும்.

    விஞ்ஞானிகள் பல்கலைக்கழகம் அல்லது தனியார் ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்து வர வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதுடன், சர்வதேச அமைப்பின் பரிந்துரையும் இருக்க வேண்டும்.

    அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் குடியுரிமை பெறுவது மிகவும் அரிது. இத்தகைய சூழ்நிலையில் அமீரக அரசின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோரிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
    Next Story
    ×