search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை

    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
    பீஜிங்:

    சீனாவில் அண்மைகாலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.‌ குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக் கூடத்தில் நேற்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது.‌அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் பள்ளிக் கூடத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்கள் சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அவர் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தினார்.

    இதற்கிடையில் மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்த ஒரு சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து அவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதையடுத்து சிறுவனை விட்டுவிட்டு தங்களிடம் சரணடைந்து விடும்படி அந்த நபரை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அந்த நபர் அதற்கு செவி சாய்க்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து 'ஸ்னைப்பர்ஸ்' என்று அழைக்கப்படும் தொலைவிலிருந்து குறிபார்த்து சுடுவதில் திறமைவாய்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரின் நெற்றிப் பொட்டில் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த நபர் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த மாணவரை போலீசார் உடனடியாக மீட்டனர்.முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய அந்த நபர் 56 வயதான வாங் என்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×