search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரிஸ் ஜான்சன்
    X
    போரிஸ் ஜான்சன்

    ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், சட்டமானது

    ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்த மசோதாவுக்கு ராணி இரண்டாவது எலிசபெத் தனது ஒப்புதலை வழங்கி விட்டதால் அது சட்டமாகி உள்ளது.
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது 2016-ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது. ஆனால் அது தொடர்பான நடைமுறைகளை செய்து முடிப்பதில் இழுபறி நிலவியது. கடைசியில் கடந்த ஜனவரி 31-ந் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது. ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.

    இப்போது அந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்து விட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாவது எலிசபெத் தனது ஒப்புதலை வழங்கி விட்டதால் அது சட்டமாகி உள்ளது.

    மசோதாவை நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த மாபெரும் நாட்டின் தலை எழுத்து இனி நம்கைகளில் உறுதியாக உள்ளது” என குறிப்பிட்டார்.

    ஆனால் அவரது அரசியல் எதிரிகள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து இருந்தபோது இருந்ததை விட நிலைமை இன்னும் மோசமாகி விடும் என எச்சரித்துள்ளனர்.

    ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் சட்டமாகி விட்டதால், ஐரோப்பிய கூட்டமைப்புடன் அந்த நாடு கூடுதல் வரியின்றி வர்த்தகம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×